Tuesday, December 20, 2005

நான் ஏன் நிறம் மாறினேன் - 2

மொதல்ல இத படிச்சிருங்கோ!

"வாராயோ வெண்ணிலாவே" பாட்ட கேட்டிரிப்பீங்க! அதில வர "கேளாயோ எந்தன் கதய" வரிய போலத் தாங் எங்கதயும். "ஏஞ்சோக கதய கேளு தாய் குலமேன்னு" சொல்லி தொடங்கூதுக்கு முன்னால ஒரு விசியம். அதாங் இந்த அறுவ நாகுரூலு(நாகர்கோவில்) பாசய பத்தி தாங். கழிஞ்ச பதிவோட நெறித்தீரலான்னு தாங் பாத்தேங். ஆனா நம்ம மக்களோட பெருங் ஆதரவு அதுக்கு கெடச்சிட்டு. ஆளாளுக்கு மெயில்ல கான்டாக்ட் பண்ணி தொடந்து அப்படியே எழுதுங்க, நல்லாயிருக்குன்னு ஒரே பாராட்டு மள தாங். எனக்குங் செரி நம்ம தாய்மொளியாது(!) மறக்காம இரிக்கட்டுன்னு நெனப்பு வந்திடிச்சி. அதனால தாங் இதிலயும் நம்ம பாசேலயே கன்டினியூ பண்ணேங். எப்ப ரொம்ப அறுவயா தோணுதோ அப்ப சொல்லீருங்கோ, நெறுத்தீரேங். செரியா?

செரி நம்ம நெறம் மாறுன கதய பாப்போம்.

நா மொதல்லயே எழுத ஆரம்பிக்கும் போது கேள்வி கேக்கூது தாங் நம்ம நோக்கோன்னு சொல்லிட்டு தாங் ஆரம்பிச்சேங். கேல்வின்ன எதப் பத்தி. அதயும் கொஞ்சம் சொல்லீட்டா நல்லாரிக்கும். சொல்லீரேங்.

முஸ்லீம்கள் எல்லாங் வெள்ளிக் கெளம பள்ளிக்கு போவூத பாத்திரிப்பீங்க. நா சின்ன பிள்ளயா இருக்கச்சே(உட்வர்ஸ் வெளம்பரம் இல்லீங்க!) வெள்ளியாச்ச தோறும் பள்ளிக்கு கரெக்டா போயிருவேங். வெள்ளி கெளம எல்லா பாள்ளீலயும் பிரசங்கம் இரிக்கீத பாத்திரிப்பீங்க. அப்படி தாங் ஒரு வெள்ளி கெளம பள்ளீல வச்சு பிரசங்கத்தில இந்த ஒலகத்த படச்ச இறைவன் மனுச கொலத்த "ஒரே ஆண் பெண்ணுல" இருந்து பரவ செய்ததா சொன்னாங்க! எனக்கு அப்ப ஒரு 7 வயசு இரிக்கும். உம்மாயும் வாப்பாயும் பள்ளிக்கி போன்னு சொன்னேனால தாங் அது வர பள்ளிக்கு போயிட்டிரிந்தேங். முஸ்லீமுன்னா பள்ளிக்கி போணூல்லா!. எனக்கு அவரு சொன்ன அந்த காரியம் அப்படியே மனசுல ஒறஞ்சு போச்சு. அப்பவே மனுசங்க மாறி மாறி அடிச்சிக்கிடூத பாத்து "ஒரே தவப்பனுக்குங் தள்ளய்க்குங் பெறந்த" இவங்க ஏன் இப்படி அடிக்காங்கோன்னு பல மொற நெனச்சிரிக்கேங்.

நல்லா பாருங்க ஒரு 7 வயசு பைனுக்கு வர கூடிய எண்ணமா இது. "ஒரே தள்ள தவப்பனுக்கு பெறந்தவங்க" தனக்குள்ள சண்ட போடக் கூடாதுன்னு ஒள்ள எண்ணம் அந்த வசிலயே மனசில பதிய காரணமென்ன? ஒரு கொளந்தக்கி மனசில வரக் கூடிய எண்ணமில்லன்னு ஒள்ளது நெச்சயம். அந்த வசிலயும் மத ஒணர்வு அவ்வளவு ஆளமா எம் மனசில பதிஞ்சிருந்துதுன்னா அது ஒருவக "மூளச்சலவ" இல்லாம வேற என்ன? அதோட இது கொழந்த பருவத்தில மட்டும் இருந்ததில்ல. வளந்த பெறவு ஒருக்கா காளேஜுல வச்சு ஒரு ஒரு பிராமண பைலுக்க சாப்பாட வேற ஒருத்தன் எடுத்து கொஞ்சம் சாப்பிட்டதுக்கு அந்த பிராமண பயன் பாக்கி சாப்பாட சாப்பிடாம கொண்டு குப்பேல தட்டியத நா பயங்கரமா எதுத்து சண்ட போட்டிருக்கேங் - பின்னாடி என்ன நடக்கூன்னு தெரியாதயே! அந்த அளவுக்கு எம் மதத்து மேல எனக்கு ஒரு பிடிப்பு; ஒரு லவ்வு.

அதுக்கு பெறவும் பெருசா ஒன்னும் மதத்த பத்தி தெரியல்லேன்னாலும் இது போல செல காரியங்கள் மட்டும் மனசுல அழியாம பதிஞ்சிருந்துது. பெறவு காளேஜு படிக்கும் போது பல மொற இதப் பத்தி யோசிச்சிருக்கேங். ஒரு மதம் சொல்லூத அப்படியே நம்பணூன்னு தாங் எல்லோரும் தம் பிள்ளக்கு படிச்சு குடுக்காங்கோ. நானும் அப்பிடியே வளந்தூதுனால எம்மதம் சொன்ன அந்த "ஒரே தள்ள தவுப்பன்" காரியத்த நானும் அப்பிடியே நம்பியிருந்தேங். பெறவு வளரும் போதே எம்மதத்தப் பத்தி கொஞ்சம் கூடூலா அறிஞ்சேங். குரானுல "எதயுமே கண்ண மூடீட்டு நம்பாதே; நல்லா ஆலோச்சி பாரு; ஒனக்கு ஆலோசிக்க என்னா; ஓம் மனசில பூட்டா போட்டிரிக்கி" இப்பிடி சிந்திக்கீதுக்கு சொல்லி நெறய வசனம் இரிக்கீத அறிஞ்சேங். அப்ப மொதல்ல எனக்கு தோணுனது அந்த "ஒரே தள்ள தவுப்பன்" விசியங் தான். பின்ன இன்னியும் படிச்சப்போ "இந்த ஒலகத்துக்கு கடவுளு ஒருத்தன்" தான்னும் இருந்துது.

மதம் சொல்லூத அப்படியே ஏத்துக்கிடணூன்னு ஒவ்வொருத்தரும் நெனச்சபோ நா வளந்த மதம் நீ அப்படி இரிக்காதே; நல்லா ஆலோசிச்சி பாத்து ஏத்துக்கோன்னு சொல்லிச்சி. செரி நமக்கும் கொஞ்சம் இதப் பத்தி யோசிச்சா என்னன்னு தோணிச்சு. அப்ப தான் ஒலகத்துக்கு "ஒரே கடவுளுன்னா, ஏங் மதம் மட்டும் நெறய?" அப்படீன்னு தோணிச்சு. செரி இதுல எந்த மதம் சொல்லூது செரின்னு கொஞ்சம் படிக்கலான்னு நெனச்சேங். அப்ப தாங் ஒரு முடிவெடுத்தேங். மனுசனா நின்னு எல்லா மதத்துலயும் கடவுளப் பத்தி என்ன சொல்லீரிக்குன்னு படிக்கலான்னு நெனச்சேங். அது ஈசியான காரியம் இல்ல. பெறந்தேலருந்து நமக்கு சொல்லி தந்தேலருந்து மாறி நின்னு பாத்தா - (அப்பிடி பாக்கூது ரொம்ப ரொம்ப கஷ்டமுன்னு ஒள்ளது செரி தான்; எம்மதம், எங் கடவுள்ன்னுள்ள நெலய அறுத்துட்டு - எல்லாரும் ஒண்ணு தாங், எல்லாருக்குங் கடவுள் ஒண்ணு தான்னு ஒலகத்த ஒரே குடும்பமாட்டு நெனச்சு பாக்கூது ஏகதேசம் முடியாத காரியந்தாங்.) அப்பிடி எல்லாரும் பாக்க ஆரம்பிச்சா எப்பிடி இரிந்திரிக்கும். கஷ்டந்தாங்; முடியாத்தது தாங்; ஆனா எனக்கு முடிஞ்சிது.

என்ன எந்தள்ள தவுப்பன் வளத்தியதிலருந்து கொஞ்சம் மாறி நின்னு எல்லா மதத்தினுடைய கடவுள் கொள்கைய பத்தி ஆராய்ச்சி பண்ணியப்போ ஆச்சரியமாட்டு எல்லா மதவும் இந்த ஒலகத்துக்கு ஒரே கடவுள் தாங் அப்படின்னு சொல்லூத அந்தந்த மதத்தோட வேதம்னு சொல்லக் கூடிய புக்கிலேந்து தெரிஞ்சேங். செரி அப்ப எப்படி இத்தன மதவும், ஒவ்வொரு மதத்திலயும் கடவுள் கொள்கைல வித்தியாசமுங் வந்துது. செல மதங்கள் சொல்லக்கூடிய மனித ஏற்றத்தாழ்வும், அதக் கண்டு கடவுளே இல்லன்னு சொல்லக் கூடிய மக்களுமாட்டு மனிசங் பிரிஞ்சாங். இதப் பத்தியெல்லாம் நா நெறய ஆராய்ஞ்சு கடைசீல ஒரு முடிவுக்கு வந்தேங். இது ஏனோ தானோன்னு எடுத்த முடிவு இல்ல. செமிட்டிக் மதங்கள்ன்னு சொல்லக்கூடிய யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் மதங்களயும் இந்து மதத்தயும் பத்தி கிட்டத்தட்ட கழிஞ்ச 12 வருசமாட்டு படிச்சு, ஆராஞ்சு முடிவுக்கு வந்தேங். இவ எல்லாங் அடிப்படேல ஒரே கடவுள தாங் சொல்லுது.

எப்படிப்பட்ட முடிவு இது. ஒலக மக்கள் சண்ட பிரச்சன இல்லாம ஒரே குடும்பமா ஆறதுக்கு இத விட நல்ல யோசன வேற இல்ல. அதனால நா கண்டறிஞ்ச இந்த முடிவ என்ன சுத்தி இருந்தவங்ககிட்ட சொல்ல நெனச்சு, சொல்ல ஆரமிச்சப்போ தான் அது எவாளவு கஷ்டமன காரியமுன்னு எனக்கு மனசிலாச்சு. அப்ப தான் இந்த பட்டிக்காட்டாங் முட்டாயி கடய பாத்தது போல இன்டர்னெட்ட பாத்திட்டிருந்த எனக்கு தமிழ்மணம் அறிமுகமாச்சு. இத நா ஏற்கெனவே சொல்லீட்டேங்.

நா அறிஞ்சத மத்தவங்கள்ட்ட சொன்னா, என்ன ரெஸ்பான்ஸ் கெடக்கூன்னு எனக்கு நேரிட்டு நல்ல அனுபவம் உள்ளதுனால புளாக்கு வளியா அத எல்லாருக்கும் தெரியப்படுத்தலான்னு நெனச்சேங். எதயும் நேராட்டு சொன்னா நம்ம மக்களுக்கு அதுல இன்ட்ரஸ்ட் வராதுங்கறனாலத் தாங் கேள்வி கேட்டு புரிய வெக்கலான்னு இந்த புளாக்க ஆரம்பிச்சேன். மொதல்ல பைபிள வச்சு இங்க ஒரு கேள்வி கேட்டேங். வந்தாரு நம்ம "ஏன்" புகழு தருமி அண்ணாச்சி. வித்தியாசமா கேள்வி கேட்டாரு. அவரு கேட்ட கேள்வியெல்லாம் எவ்வளவு அபத்தமுன்னும், விசியம் தெரியாம ஒரு குறிப்பிட்ட சமுதாயத்த கொச்சபடுத்தனூன்னே அவரு அறியாத விசியத்தயெல்லாம் வச்சு ஏதோ அவரு எல்லாங் தெரிஞ்சது போல தப்பு தப்பா கேள்விகள வச்சது பத்தியும் பின்னாடி வாறேங்.

அவரு கேட்ட கேள்விக்கு செரியா நா பதில குடுத்தா அவரு அதே கேள்விய பின்ன மாத்தி போடாராம். கொறஞ்ச பட்சம் நா பதிலு சொன்னது செரின்னு கூட ஒப்புகிடாம அவரு சொல்லூதுதாங் செரீன்னு காட்ட பிளேட்ட மாத்தி போடாராம். மட்டுமில்ல கிண்டல் தொனீல பதுலு வேற. இந்த "நா பிடிச்ச மொயலுக்கு மூணூ காலுன்னு" சொல்ல ஆள பாத்திருக்கோம்; செலப்போ மொயலுக்கு ஒரு காலு மொடன்னு நெச்சு நாம சம்மதிச்சிடலாம். "ஒலகத்துல ஒள்ள எல்லா மொயலுக்கும் மூணு காலு தான்னு" சொல்ல ஆள எந்த லிஸ்டுல சேக்கூதுக்கு. இவரு அப்படி தாங் சொல்லாரு. அத எல்லாம் பெறவு ஒவ்வொண்ணா வெலாவாரியா சொல்லேங். மொதல்ல சொல்ல வந்தத சொல்லி முடிச்சிர்ரேங்.

அவரு திருப்பி அதே கேள்விய மாத்தி கேட்டப்போ தாங் ஆகா ஆழந்தெரியாம காலவிட்டுட்டமோன்னு தோணிச்சி. "கடவுள்" விசியத்துல 12 வருசமாட்டு படிச்சு தெரிஞ்சவங் தமிழ் இன்டர்நெட்டயும், தமிழ் மணத்தையும் அதுல நடக்க கிருமி பிடி சண்டயயும் பத்தி கொஞ்சங்கூட தெரியாம எறங்குனது தப்பூன்னு அப்ப தாங் தெரிஞ்சிகிட்டேங். செரி கொஞ்ச நாளு அதப் பத்தியும் தெரிஞ்சிகிட்டு பெறவு எழுதலான்னு ஒரு மாசமா எல்லா பதிவுகளயும் தொடந்து படிக்க ஆரம்பிச்சேங். நெறய விசியமும் தெரிஞ்சிகிட்டேங்.

முக்கியமா "ஏன்" புகழு தருமி அண்ணாச்சியோட ஜில்லாலங்கிடி தனத்த. அதோட ஒரு விசியம் நல்லா எனக்கு மனசிலாச்சி. தன்ன பெரிய அறிவாளின்னு காட்ட நெறய விசியம் தெரியணூன்னு அவசியமில்லேன்னும், எப்படி எப்படியெல்லாங் நாம சொல்லூது தாங் செரீன்னு மத்தவங்களுக்கு காட்ட புளக்க எப்படி பயன்படுத்தலான்னும். என்ன நோக்கத்துக்கு வந்தேனோ அந்த நோக்கத்தவிட்டு "இப்ப" மட்டும் மாறி புளாக்கு மூலமா பொய்கள "ஏன்"னு தலைப்பிட்டு தொடர் பதிவு போட்டு மக்கள ஏமாத்தூத மொதல்ல வெளிப்படுத்தணுமுன்னு அப்பத்தாங் எனக்கு தோணிச்சி. இது தாங் நா நெறம் மாற காரணம். இனி அடுத்தேலயிருந்து எப்பிடி எப்பிடியெல்லாங் புளாக்குல சத்தியத்த மறக்காங்கோன்னும் ஒம்போது கேள்வி கேக்காக் கூடியவரு எவ்வளவு விசிய(வேத) ஞானத்தோட அப்பிடி கேக்காருன்னும் தொடந்து பாக்கலாம்.

ஒரு முக்கிய விசியம்:

போவும்போ எப்பிடியிரிக்குன்னும் சொல்லீட்டு போங்கோ. தப்பா எழுதியிரிந்தா கண்டிப்பா சொல்லீட்டு போங்கோ. செலர போல எனக்கு சாதகமா எழுதூத மட்டும் விட்டுட்டு என் தப்ப சுட்டிக்காட்டும் பின்னூட்டங்கள அழிக்க ஒன்னும் மாட்டேங்.

Tuesday, December 13, 2005

நான் ஏன் நிறம் மாறினேன்! - 1

என்னடாது சட்டய மாத்துறத கேட்டிருக்கோம்; வீட்ட மாத்துறத கேட்டிருக்கோம்; செலரு மதத்த மாத்துறதயும் கேட்டிருக்கோம்; இவய்ங் என்னடாது புதுசா நெறத்த மாத்திட்டேன்னு! யாராது ஒடம்புக்க நெறத்த மாத்திட்டேன்னு தப்பா நெனச்சிட்டு கறுப்ப வெள்ளயா மாத்த முடியுமான்னு கேட்டுட்டு வந்திராந்தீங்க! இது நா இப்பத்தைக்கு மட்டும் வலயில பதிக்க வந்த காரணத்த மாத்திக்கிட்டேங்கிறதப் பத்தியும், திடீருன்னு அப்பிடி மாத்திக்கிட காரணமென்னன்னும் சொல்லூதுக்காகத் தாங் இந்த பதிவு.

செலப்போ இது நாலு அஞ்சு பதிவு வரக்கும் போவூன்னு நெனக்கேங். எதயும் நெச்சயமாட்டு சொல்ல முடியாதில்ல. பாப்போம். மொளச்சு மூணு எல விடல அதுக்குள்ள இவனுக்கு என்ன வந்துதுன்னு நீங்க கேக்கூது எனக்கு புரியிது. என்ன செய்ய அந்த சூழ்நெலக்கு என்ன வரவச்சிட்டாங்களே.

இந்த வேலீல போற ஓணான எடுத்து.............. அந்த பழமொழிய கேட்டிரிக்கீங்கல்ல. அது போல தாங் இதும். எப்பவாது நேரங்கெடக்கிம்போ வலேல மேய்ஞ்சிட்டிருந்தேங். அப்போதான் நம்ம காசி அண்ணாச்சியோட தமிழ் மணமும் அதுல வரூதுக்கு ப்ரீயாட்டு ப்ளாக்கும் கெடக்கிதுன்னு தெரிஞ்சிது. செரி நமக்கும் ஒண்ண தொறந்து எதயாது எழுதலான்னு வந்தேங்.

எழுதும்போ என்னத்த எழுதூது அப்படீன்னு யோசிச்சப்ப தான் ஐடியா வந்துது, நமக்கு தோணக்கூடிய சந்தேகங்கள எல்லாங் எழுதி வைக்கலாங். யாராது அதப் பத்தி வெளக்கங் தந்தா அது நமக்குங் பிரயோஜனமா இருக்கூன்னு நெனச்சு பதிக்க ஆரம்பிச்சேங். இத நா மொதல்ல ஒள்ள பதிவுலயே சொல்லீட்டு தாங் ஆரம்பிச்சதே.

அப்பிடி நா தொடங்கின சமயத்தில எனக்கு இங்க ஒள்ள வல அடிதடி தெரியாதுங்க. ஏதோ எனக்கிட்ட இருக்க கொஞ்சம் மூளய வச்சு அதில இருக்க வெசயத்த எழுதலான்னு தாங் தொடங்கினேங். நா வந்தப்போ கூட எனக்கு வரவேற்ப்பெல்லாங் பலமாத்தாங் இருந்துது.

தொடந்து ரண்டு மூணு பதிவு போட்டப்போ பெரிய பிரச்சன ஒண்ணுங் வரல. இதுக்க முந்துன பதிவுல வந்துது பாருங்கோ ஒண்ணு ரண்டு பின்னூட்டம், அத படிச்சப்போ தான் ஒரு விசியம் பிடிகெடச்சுது. இந்த வலய பொறுத்தவர நாம எதுக்கு வந்தோன்னு மொதல்லயே சொல்ல கூடாதுன்னும், எந்த வெசயத்தயும் தொறந்து பேசகூடாதுன்னும்.(இது ஒன்னும் ஒடனே நா எடுத்த முடிவில்லீங்க, கழிஞ்ச ஒரு மாசமா தொடந்து தமிழ் பதிவுகள படிச்சு நிதானமா வந்த முடிவு தாங்க.)

அது மட்டுங் இல்லாம நம்மெ யாருன்னு வெளிப்படுத்தாம முக்கியமா நம்ம மதம் என்னன்னு வெளிப்படுத்தாம முடிஞ்ச வர ஆளப்பாத்து முடிஞ்சா மொகத்தப் பாத்து, ஆளு யாரு எந்த மதத்த சேந்தவங் அப்பிடீன்னு தெரிஞ்சிகிட்டு அதுக்கு ஏஞ்சாப்புலத் தாங் பதிலும் சொல்லணூண்ணுங் தெரிஞ்சிட்டேன்.

இத மொதல்லயே தெரியாட்டேனால தாங் பேர பிடிச்சதுனால "பகுத்தறிவாளன்"னு வச்சிக்கிட்டாலும், நா ஒரு முஸ்லிமுன்னு ஒள்ளத மறைக்கல்ல.

நெறய படிக்குணூன்னே கழிஞ்ச ஒரு மாசமா பதிவு ஒண்ணும் போட கூட இல்ல. அப்பிடி இருக்கும்போ தான் எடேல ஒரு சம்பவங் நடந்துது. எழுதூதுக்கு நெறய விசியம் தெரிஞ்சிரிக்கணூன்னு நா தப்பா வெளங்கியிருந்தேன்னு அப்ப தாங் தெரிஞ்சிது. அது மட்டும் இல்லாம இங்க என்ன நடக்குதுன்னும் ஓரளவு நல்லா தெரிஞ்சிட்டேன். அதனால தாங் இப்போதக்கு மட்டுங் கேள்வி கேக்கூத மாத்தி வச்சிட்டு என்ன வம்புக்கிழுத்தவருடைய நேர்மைய மொதல்ல வெளிப்படுத்த போறேங்.

அது தாங் "நான் ஏன் நிறம் மாறினேன்" தொடர் பதிவு!

நா இப்பிடி ஒரு முடிவுக்கு வரூதுக்கு என்ன காரணம், எது எம்மனச மாத்திச்சு, "அந்த" மாறியவரு அதுக்கு சொல்ல காரணம் செரி தானா, தேடி அலுத்து முடிவுக்கு வந்தேன்னு சொல்லூது செரியா, உண்மையா அவரு தேடி வெட கெடக்காமத் தான் "மாறினாரா", அவரு சொல்ல காரணம் எல்லாஞ் செரி தானா? எல்லாத்தையும் தொடந்து எழுதலான்னு இருக்கேன்.

ஆனா அதுக்காக பின்னூட்டபெட்டிய மூடல. நா சொல்லூது தப்புன்னா ஒடனே யாரு வேணுமின்னாலும் சொல்ல தொறந்து தான் வெச்சிரிக்கேங். பின்ன மூடி வக்கீதுலயும் எனக்கு நம்பிக்க இல்ல(அது தனக்க கருத்து தப்பூன்னு சுட்டிகாட்டுத பின்னூட்டத்த அழிக்கவும் தானே).

அடுத்த பதிவுல பாக்கலாம்.

பின்குறிப்பு:

1. நா பதிக்க வந்தப்போ டி.பி.ஆர் அண்ணாச்சி நாகுரூலு(நாகர் கோவில்) பாசேல எழுத சென்னாரு. அவருக்காக இந்த பதிவு. தாங்க முடியாத்தவங்க அவருக்காக இந்த ஒரு மொற மட்டும் பொறுத்துகிடுங்கோ!

2. யாரயும் தனிப்பட்ட மொறேல விமர்சிக்கணூண்ணு நா நெனெக்கல்ல. இந்த தொடரு அப்படி இரிக்கயும் செய்யாது. ஒரு பொது விசியத்த பத்தி எழுதும்போ அந்த விசியமா சார்ந்து நிக்க ஆளு அதுல வந்தா அதுக்கு நா பொறுப்பல்ல.