Tuesday, December 20, 2005

நான் ஏன் நிறம் மாறினேன் - 2

மொதல்ல இத படிச்சிருங்கோ!

"வாராயோ வெண்ணிலாவே" பாட்ட கேட்டிரிப்பீங்க! அதில வர "கேளாயோ எந்தன் கதய" வரிய போலத் தாங் எங்கதயும். "ஏஞ்சோக கதய கேளு தாய் குலமேன்னு" சொல்லி தொடங்கூதுக்கு முன்னால ஒரு விசியம். அதாங் இந்த அறுவ நாகுரூலு(நாகர்கோவில்) பாசய பத்தி தாங். கழிஞ்ச பதிவோட நெறித்தீரலான்னு தாங் பாத்தேங். ஆனா நம்ம மக்களோட பெருங் ஆதரவு அதுக்கு கெடச்சிட்டு. ஆளாளுக்கு மெயில்ல கான்டாக்ட் பண்ணி தொடந்து அப்படியே எழுதுங்க, நல்லாயிருக்குன்னு ஒரே பாராட்டு மள தாங். எனக்குங் செரி நம்ம தாய்மொளியாது(!) மறக்காம இரிக்கட்டுன்னு நெனப்பு வந்திடிச்சி. அதனால தாங் இதிலயும் நம்ம பாசேலயே கன்டினியூ பண்ணேங். எப்ப ரொம்ப அறுவயா தோணுதோ அப்ப சொல்லீருங்கோ, நெறுத்தீரேங். செரியா?

செரி நம்ம நெறம் மாறுன கதய பாப்போம்.

நா மொதல்லயே எழுத ஆரம்பிக்கும் போது கேள்வி கேக்கூது தாங் நம்ம நோக்கோன்னு சொல்லிட்டு தாங் ஆரம்பிச்சேங். கேல்வின்ன எதப் பத்தி. அதயும் கொஞ்சம் சொல்லீட்டா நல்லாரிக்கும். சொல்லீரேங்.

முஸ்லீம்கள் எல்லாங் வெள்ளிக் கெளம பள்ளிக்கு போவூத பாத்திரிப்பீங்க. நா சின்ன பிள்ளயா இருக்கச்சே(உட்வர்ஸ் வெளம்பரம் இல்லீங்க!) வெள்ளியாச்ச தோறும் பள்ளிக்கு கரெக்டா போயிருவேங். வெள்ளி கெளம எல்லா பாள்ளீலயும் பிரசங்கம் இரிக்கீத பாத்திரிப்பீங்க. அப்படி தாங் ஒரு வெள்ளி கெளம பள்ளீல வச்சு பிரசங்கத்தில இந்த ஒலகத்த படச்ச இறைவன் மனுச கொலத்த "ஒரே ஆண் பெண்ணுல" இருந்து பரவ செய்ததா சொன்னாங்க! எனக்கு அப்ப ஒரு 7 வயசு இரிக்கும். உம்மாயும் வாப்பாயும் பள்ளிக்கி போன்னு சொன்னேனால தாங் அது வர பள்ளிக்கு போயிட்டிரிந்தேங். முஸ்லீமுன்னா பள்ளிக்கி போணூல்லா!. எனக்கு அவரு சொன்ன அந்த காரியம் அப்படியே மனசுல ஒறஞ்சு போச்சு. அப்பவே மனுசங்க மாறி மாறி அடிச்சிக்கிடூத பாத்து "ஒரே தவப்பனுக்குங் தள்ளய்க்குங் பெறந்த" இவங்க ஏன் இப்படி அடிக்காங்கோன்னு பல மொற நெனச்சிரிக்கேங்.

நல்லா பாருங்க ஒரு 7 வயசு பைனுக்கு வர கூடிய எண்ணமா இது. "ஒரே தள்ள தவப்பனுக்கு பெறந்தவங்க" தனக்குள்ள சண்ட போடக் கூடாதுன்னு ஒள்ள எண்ணம் அந்த வசிலயே மனசில பதிய காரணமென்ன? ஒரு கொளந்தக்கி மனசில வரக் கூடிய எண்ணமில்லன்னு ஒள்ளது நெச்சயம். அந்த வசிலயும் மத ஒணர்வு அவ்வளவு ஆளமா எம் மனசில பதிஞ்சிருந்துதுன்னா அது ஒருவக "மூளச்சலவ" இல்லாம வேற என்ன? அதோட இது கொழந்த பருவத்தில மட்டும் இருந்ததில்ல. வளந்த பெறவு ஒருக்கா காளேஜுல வச்சு ஒரு ஒரு பிராமண பைலுக்க சாப்பாட வேற ஒருத்தன் எடுத்து கொஞ்சம் சாப்பிட்டதுக்கு அந்த பிராமண பயன் பாக்கி சாப்பாட சாப்பிடாம கொண்டு குப்பேல தட்டியத நா பயங்கரமா எதுத்து சண்ட போட்டிருக்கேங் - பின்னாடி என்ன நடக்கூன்னு தெரியாதயே! அந்த அளவுக்கு எம் மதத்து மேல எனக்கு ஒரு பிடிப்பு; ஒரு லவ்வு.

அதுக்கு பெறவும் பெருசா ஒன்னும் மதத்த பத்தி தெரியல்லேன்னாலும் இது போல செல காரியங்கள் மட்டும் மனசுல அழியாம பதிஞ்சிருந்துது. பெறவு காளேஜு படிக்கும் போது பல மொற இதப் பத்தி யோசிச்சிருக்கேங். ஒரு மதம் சொல்லூத அப்படியே நம்பணூன்னு தாங் எல்லோரும் தம் பிள்ளக்கு படிச்சு குடுக்காங்கோ. நானும் அப்பிடியே வளந்தூதுனால எம்மதம் சொன்ன அந்த "ஒரே தள்ள தவுப்பன்" காரியத்த நானும் அப்பிடியே நம்பியிருந்தேங். பெறவு வளரும் போதே எம்மதத்தப் பத்தி கொஞ்சம் கூடூலா அறிஞ்சேங். குரானுல "எதயுமே கண்ண மூடீட்டு நம்பாதே; நல்லா ஆலோச்சி பாரு; ஒனக்கு ஆலோசிக்க என்னா; ஓம் மனசில பூட்டா போட்டிரிக்கி" இப்பிடி சிந்திக்கீதுக்கு சொல்லி நெறய வசனம் இரிக்கீத அறிஞ்சேங். அப்ப மொதல்ல எனக்கு தோணுனது அந்த "ஒரே தள்ள தவுப்பன்" விசியங் தான். பின்ன இன்னியும் படிச்சப்போ "இந்த ஒலகத்துக்கு கடவுளு ஒருத்தன்" தான்னும் இருந்துது.

மதம் சொல்லூத அப்படியே ஏத்துக்கிடணூன்னு ஒவ்வொருத்தரும் நெனச்சபோ நா வளந்த மதம் நீ அப்படி இரிக்காதே; நல்லா ஆலோசிச்சி பாத்து ஏத்துக்கோன்னு சொல்லிச்சி. செரி நமக்கும் கொஞ்சம் இதப் பத்தி யோசிச்சா என்னன்னு தோணிச்சு. அப்ப தான் ஒலகத்துக்கு "ஒரே கடவுளுன்னா, ஏங் மதம் மட்டும் நெறய?" அப்படீன்னு தோணிச்சு. செரி இதுல எந்த மதம் சொல்லூது செரின்னு கொஞ்சம் படிக்கலான்னு நெனச்சேங். அப்ப தாங் ஒரு முடிவெடுத்தேங். மனுசனா நின்னு எல்லா மதத்துலயும் கடவுளப் பத்தி என்ன சொல்லீரிக்குன்னு படிக்கலான்னு நெனச்சேங். அது ஈசியான காரியம் இல்ல. பெறந்தேலருந்து நமக்கு சொல்லி தந்தேலருந்து மாறி நின்னு பாத்தா - (அப்பிடி பாக்கூது ரொம்ப ரொம்ப கஷ்டமுன்னு ஒள்ளது செரி தான்; எம்மதம், எங் கடவுள்ன்னுள்ள நெலய அறுத்துட்டு - எல்லாரும் ஒண்ணு தாங், எல்லாருக்குங் கடவுள் ஒண்ணு தான்னு ஒலகத்த ஒரே குடும்பமாட்டு நெனச்சு பாக்கூது ஏகதேசம் முடியாத காரியந்தாங்.) அப்பிடி எல்லாரும் பாக்க ஆரம்பிச்சா எப்பிடி இரிந்திரிக்கும். கஷ்டந்தாங்; முடியாத்தது தாங்; ஆனா எனக்கு முடிஞ்சிது.

என்ன எந்தள்ள தவுப்பன் வளத்தியதிலருந்து கொஞ்சம் மாறி நின்னு எல்லா மதத்தினுடைய கடவுள் கொள்கைய பத்தி ஆராய்ச்சி பண்ணியப்போ ஆச்சரியமாட்டு எல்லா மதவும் இந்த ஒலகத்துக்கு ஒரே கடவுள் தாங் அப்படின்னு சொல்லூத அந்தந்த மதத்தோட வேதம்னு சொல்லக் கூடிய புக்கிலேந்து தெரிஞ்சேங். செரி அப்ப எப்படி இத்தன மதவும், ஒவ்வொரு மதத்திலயும் கடவுள் கொள்கைல வித்தியாசமுங் வந்துது. செல மதங்கள் சொல்லக்கூடிய மனித ஏற்றத்தாழ்வும், அதக் கண்டு கடவுளே இல்லன்னு சொல்லக் கூடிய மக்களுமாட்டு மனிசங் பிரிஞ்சாங். இதப் பத்தியெல்லாம் நா நெறய ஆராய்ஞ்சு கடைசீல ஒரு முடிவுக்கு வந்தேங். இது ஏனோ தானோன்னு எடுத்த முடிவு இல்ல. செமிட்டிக் மதங்கள்ன்னு சொல்லக்கூடிய யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் மதங்களயும் இந்து மதத்தயும் பத்தி கிட்டத்தட்ட கழிஞ்ச 12 வருசமாட்டு படிச்சு, ஆராஞ்சு முடிவுக்கு வந்தேங். இவ எல்லாங் அடிப்படேல ஒரே கடவுள தாங் சொல்லுது.

எப்படிப்பட்ட முடிவு இது. ஒலக மக்கள் சண்ட பிரச்சன இல்லாம ஒரே குடும்பமா ஆறதுக்கு இத விட நல்ல யோசன வேற இல்ல. அதனால நா கண்டறிஞ்ச இந்த முடிவ என்ன சுத்தி இருந்தவங்ககிட்ட சொல்ல நெனச்சு, சொல்ல ஆரமிச்சப்போ தான் அது எவாளவு கஷ்டமன காரியமுன்னு எனக்கு மனசிலாச்சு. அப்ப தான் இந்த பட்டிக்காட்டாங் முட்டாயி கடய பாத்தது போல இன்டர்னெட்ட பாத்திட்டிருந்த எனக்கு தமிழ்மணம் அறிமுகமாச்சு. இத நா ஏற்கெனவே சொல்லீட்டேங்.

நா அறிஞ்சத மத்தவங்கள்ட்ட சொன்னா, என்ன ரெஸ்பான்ஸ் கெடக்கூன்னு எனக்கு நேரிட்டு நல்ல அனுபவம் உள்ளதுனால புளாக்கு வளியா அத எல்லாருக்கும் தெரியப்படுத்தலான்னு நெனச்சேங். எதயும் நேராட்டு சொன்னா நம்ம மக்களுக்கு அதுல இன்ட்ரஸ்ட் வராதுங்கறனாலத் தாங் கேள்வி கேட்டு புரிய வெக்கலான்னு இந்த புளாக்க ஆரம்பிச்சேன். மொதல்ல பைபிள வச்சு இங்க ஒரு கேள்வி கேட்டேங். வந்தாரு நம்ம "ஏன்" புகழு தருமி அண்ணாச்சி. வித்தியாசமா கேள்வி கேட்டாரு. அவரு கேட்ட கேள்வியெல்லாம் எவ்வளவு அபத்தமுன்னும், விசியம் தெரியாம ஒரு குறிப்பிட்ட சமுதாயத்த கொச்சபடுத்தனூன்னே அவரு அறியாத விசியத்தயெல்லாம் வச்சு ஏதோ அவரு எல்லாங் தெரிஞ்சது போல தப்பு தப்பா கேள்விகள வச்சது பத்தியும் பின்னாடி வாறேங்.

அவரு கேட்ட கேள்விக்கு செரியா நா பதில குடுத்தா அவரு அதே கேள்விய பின்ன மாத்தி போடாராம். கொறஞ்ச பட்சம் நா பதிலு சொன்னது செரின்னு கூட ஒப்புகிடாம அவரு சொல்லூதுதாங் செரீன்னு காட்ட பிளேட்ட மாத்தி போடாராம். மட்டுமில்ல கிண்டல் தொனீல பதுலு வேற. இந்த "நா பிடிச்ச மொயலுக்கு மூணூ காலுன்னு" சொல்ல ஆள பாத்திருக்கோம்; செலப்போ மொயலுக்கு ஒரு காலு மொடன்னு நெச்சு நாம சம்மதிச்சிடலாம். "ஒலகத்துல ஒள்ள எல்லா மொயலுக்கும் மூணு காலு தான்னு" சொல்ல ஆள எந்த லிஸ்டுல சேக்கூதுக்கு. இவரு அப்படி தாங் சொல்லாரு. அத எல்லாம் பெறவு ஒவ்வொண்ணா வெலாவாரியா சொல்லேங். மொதல்ல சொல்ல வந்தத சொல்லி முடிச்சிர்ரேங்.

அவரு திருப்பி அதே கேள்விய மாத்தி கேட்டப்போ தாங் ஆகா ஆழந்தெரியாம காலவிட்டுட்டமோன்னு தோணிச்சி. "கடவுள்" விசியத்துல 12 வருசமாட்டு படிச்சு தெரிஞ்சவங் தமிழ் இன்டர்நெட்டயும், தமிழ் மணத்தையும் அதுல நடக்க கிருமி பிடி சண்டயயும் பத்தி கொஞ்சங்கூட தெரியாம எறங்குனது தப்பூன்னு அப்ப தாங் தெரிஞ்சிகிட்டேங். செரி கொஞ்ச நாளு அதப் பத்தியும் தெரிஞ்சிகிட்டு பெறவு எழுதலான்னு ஒரு மாசமா எல்லா பதிவுகளயும் தொடந்து படிக்க ஆரம்பிச்சேங். நெறய விசியமும் தெரிஞ்சிகிட்டேங்.

முக்கியமா "ஏன்" புகழு தருமி அண்ணாச்சியோட ஜில்லாலங்கிடி தனத்த. அதோட ஒரு விசியம் நல்லா எனக்கு மனசிலாச்சி. தன்ன பெரிய அறிவாளின்னு காட்ட நெறய விசியம் தெரியணூன்னு அவசியமில்லேன்னும், எப்படி எப்படியெல்லாங் நாம சொல்லூது தாங் செரீன்னு மத்தவங்களுக்கு காட்ட புளக்க எப்படி பயன்படுத்தலான்னும். என்ன நோக்கத்துக்கு வந்தேனோ அந்த நோக்கத்தவிட்டு "இப்ப" மட்டும் மாறி புளாக்கு மூலமா பொய்கள "ஏன்"னு தலைப்பிட்டு தொடர் பதிவு போட்டு மக்கள ஏமாத்தூத மொதல்ல வெளிப்படுத்தணுமுன்னு அப்பத்தாங் எனக்கு தோணிச்சி. இது தாங் நா நெறம் மாற காரணம். இனி அடுத்தேலயிருந்து எப்பிடி எப்பிடியெல்லாங் புளாக்குல சத்தியத்த மறக்காங்கோன்னும் ஒம்போது கேள்வி கேக்காக் கூடியவரு எவ்வளவு விசிய(வேத) ஞானத்தோட அப்பிடி கேக்காருன்னும் தொடந்து பாக்கலாம்.

ஒரு முக்கிய விசியம்:

போவும்போ எப்பிடியிரிக்குன்னும் சொல்லீட்டு போங்கோ. தப்பா எழுதியிரிந்தா கண்டிப்பா சொல்லீட்டு போங்கோ. செலர போல எனக்கு சாதகமா எழுதூத மட்டும் விட்டுட்டு என் தப்ப சுட்டிக்காட்டும் பின்னூட்டங்கள அழிக்க ஒன்னும் மாட்டேங்.

Tuesday, December 13, 2005

நான் ஏன் நிறம் மாறினேன்! - 1

என்னடாது சட்டய மாத்துறத கேட்டிருக்கோம்; வீட்ட மாத்துறத கேட்டிருக்கோம்; செலரு மதத்த மாத்துறதயும் கேட்டிருக்கோம்; இவய்ங் என்னடாது புதுசா நெறத்த மாத்திட்டேன்னு! யாராது ஒடம்புக்க நெறத்த மாத்திட்டேன்னு தப்பா நெனச்சிட்டு கறுப்ப வெள்ளயா மாத்த முடியுமான்னு கேட்டுட்டு வந்திராந்தீங்க! இது நா இப்பத்தைக்கு மட்டும் வலயில பதிக்க வந்த காரணத்த மாத்திக்கிட்டேங்கிறதப் பத்தியும், திடீருன்னு அப்பிடி மாத்திக்கிட காரணமென்னன்னும் சொல்லூதுக்காகத் தாங் இந்த பதிவு.

செலப்போ இது நாலு அஞ்சு பதிவு வரக்கும் போவூன்னு நெனக்கேங். எதயும் நெச்சயமாட்டு சொல்ல முடியாதில்ல. பாப்போம். மொளச்சு மூணு எல விடல அதுக்குள்ள இவனுக்கு என்ன வந்துதுன்னு நீங்க கேக்கூது எனக்கு புரியிது. என்ன செய்ய அந்த சூழ்நெலக்கு என்ன வரவச்சிட்டாங்களே.

இந்த வேலீல போற ஓணான எடுத்து.............. அந்த பழமொழிய கேட்டிரிக்கீங்கல்ல. அது போல தாங் இதும். எப்பவாது நேரங்கெடக்கிம்போ வலேல மேய்ஞ்சிட்டிருந்தேங். அப்போதான் நம்ம காசி அண்ணாச்சியோட தமிழ் மணமும் அதுல வரூதுக்கு ப்ரீயாட்டு ப்ளாக்கும் கெடக்கிதுன்னு தெரிஞ்சிது. செரி நமக்கும் ஒண்ண தொறந்து எதயாது எழுதலான்னு வந்தேங்.

எழுதும்போ என்னத்த எழுதூது அப்படீன்னு யோசிச்சப்ப தான் ஐடியா வந்துது, நமக்கு தோணக்கூடிய சந்தேகங்கள எல்லாங் எழுதி வைக்கலாங். யாராது அதப் பத்தி வெளக்கங் தந்தா அது நமக்குங் பிரயோஜனமா இருக்கூன்னு நெனச்சு பதிக்க ஆரம்பிச்சேங். இத நா மொதல்ல ஒள்ள பதிவுலயே சொல்லீட்டு தாங் ஆரம்பிச்சதே.

அப்பிடி நா தொடங்கின சமயத்தில எனக்கு இங்க ஒள்ள வல அடிதடி தெரியாதுங்க. ஏதோ எனக்கிட்ட இருக்க கொஞ்சம் மூளய வச்சு அதில இருக்க வெசயத்த எழுதலான்னு தாங் தொடங்கினேங். நா வந்தப்போ கூட எனக்கு வரவேற்ப்பெல்லாங் பலமாத்தாங் இருந்துது.

தொடந்து ரண்டு மூணு பதிவு போட்டப்போ பெரிய பிரச்சன ஒண்ணுங் வரல. இதுக்க முந்துன பதிவுல வந்துது பாருங்கோ ஒண்ணு ரண்டு பின்னூட்டம், அத படிச்சப்போ தான் ஒரு விசியம் பிடிகெடச்சுது. இந்த வலய பொறுத்தவர நாம எதுக்கு வந்தோன்னு மொதல்லயே சொல்ல கூடாதுன்னும், எந்த வெசயத்தயும் தொறந்து பேசகூடாதுன்னும்.(இது ஒன்னும் ஒடனே நா எடுத்த முடிவில்லீங்க, கழிஞ்ச ஒரு மாசமா தொடந்து தமிழ் பதிவுகள படிச்சு நிதானமா வந்த முடிவு தாங்க.)

அது மட்டுங் இல்லாம நம்மெ யாருன்னு வெளிப்படுத்தாம முக்கியமா நம்ம மதம் என்னன்னு வெளிப்படுத்தாம முடிஞ்ச வர ஆளப்பாத்து முடிஞ்சா மொகத்தப் பாத்து, ஆளு யாரு எந்த மதத்த சேந்தவங் அப்பிடீன்னு தெரிஞ்சிகிட்டு அதுக்கு ஏஞ்சாப்புலத் தாங் பதிலும் சொல்லணூண்ணுங் தெரிஞ்சிட்டேன்.

இத மொதல்லயே தெரியாட்டேனால தாங் பேர பிடிச்சதுனால "பகுத்தறிவாளன்"னு வச்சிக்கிட்டாலும், நா ஒரு முஸ்லிமுன்னு ஒள்ளத மறைக்கல்ல.

நெறய படிக்குணூன்னே கழிஞ்ச ஒரு மாசமா பதிவு ஒண்ணும் போட கூட இல்ல. அப்பிடி இருக்கும்போ தான் எடேல ஒரு சம்பவங் நடந்துது. எழுதூதுக்கு நெறய விசியம் தெரிஞ்சிரிக்கணூன்னு நா தப்பா வெளங்கியிருந்தேன்னு அப்ப தாங் தெரிஞ்சிது. அது மட்டும் இல்லாம இங்க என்ன நடக்குதுன்னும் ஓரளவு நல்லா தெரிஞ்சிட்டேன். அதனால தாங் இப்போதக்கு மட்டுங் கேள்வி கேக்கூத மாத்தி வச்சிட்டு என்ன வம்புக்கிழுத்தவருடைய நேர்மைய மொதல்ல வெளிப்படுத்த போறேங்.

அது தாங் "நான் ஏன் நிறம் மாறினேன்" தொடர் பதிவு!

நா இப்பிடி ஒரு முடிவுக்கு வரூதுக்கு என்ன காரணம், எது எம்மனச மாத்திச்சு, "அந்த" மாறியவரு அதுக்கு சொல்ல காரணம் செரி தானா, தேடி அலுத்து முடிவுக்கு வந்தேன்னு சொல்லூது செரியா, உண்மையா அவரு தேடி வெட கெடக்காமத் தான் "மாறினாரா", அவரு சொல்ல காரணம் எல்லாஞ் செரி தானா? எல்லாத்தையும் தொடந்து எழுதலான்னு இருக்கேன்.

ஆனா அதுக்காக பின்னூட்டபெட்டிய மூடல. நா சொல்லூது தப்புன்னா ஒடனே யாரு வேணுமின்னாலும் சொல்ல தொறந்து தான் வெச்சிரிக்கேங். பின்ன மூடி வக்கீதுலயும் எனக்கு நம்பிக்க இல்ல(அது தனக்க கருத்து தப்பூன்னு சுட்டிகாட்டுத பின்னூட்டத்த அழிக்கவும் தானே).

அடுத்த பதிவுல பாக்கலாம்.

பின்குறிப்பு:

1. நா பதிக்க வந்தப்போ டி.பி.ஆர் அண்ணாச்சி நாகுரூலு(நாகர் கோவில்) பாசேல எழுத சென்னாரு. அவருக்காக இந்த பதிவு. தாங்க முடியாத்தவங்க அவருக்காக இந்த ஒரு மொற மட்டும் பொறுத்துகிடுங்கோ!

2. யாரயும் தனிப்பட்ட மொறேல விமர்சிக்கணூண்ணு நா நெனெக்கல்ல. இந்த தொடரு அப்படி இரிக்கயும் செய்யாது. ஒரு பொது விசியத்த பத்தி எழுதும்போ அந்த விசியமா சார்ந்து நிக்க ஆளு அதுல வந்தா அதுக்கு நா பொறுப்பல்ல.

Tuesday, November 15, 2005

முஸ்லிம்கள் கிறிஸ்தவர்களாவார்களா?

சமீபத்தில் பைபிளின் ஒரு பிரதி எனக்கு கிடைத்தது. புத்தகங்களை அதிகம் விரும்பிப் படிப்பதால் இதையும் விட வில்லை. இதைப் படிப்பதற்கு மற்றொரு காரணமும் உண்டு.

பைபிள் இன்றைய உலகின் மிகப் பெரிய சமுதாயமான கிறிஸ்தவர்கள் பின்பற்றுவதாக இருந்தாலும் உலகின் மற்றைய அடுத்த இரு பெரிய சமுதாயங்களான முஸ்லிம் மற்றும் யூதர்களோடும் தொடர்புடையது.(இதில் முஸ்லிம்கள் பைபிளை நம்புகின்றனர். ஆனால் யூதர்கள் பைபிளை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனைக் குறித்து மற்றொரு சமயம் பார்க்கலாம்).

உலகின் இம்மூன்று பெரிய சமுதாயங்களுக்கும் இடையில் பல ஒற்றுமைகள் உண்டு. அவற்றில் சில,

1. உலகிற்கு ஒரே கடவுள் என்ற சித்தாந்தத்தை கொண்டவை(இந்து மதமும் அடிப்படையில் ஒரே கடவுளைத் தான் கூறுகிறது)

2. மூன்று மதங்களுமே உருவ வழிபாட்டுக்கு எதிரானவை.

3. மூன்று மதங்களுமே உலகின் ஆதி மனிதனாக ஒரே மனிதனையே குறிப்பிடுகின்றன.

4. எல்லாவற்றையும் விட மிகப் பெரிய ஒற்றுமை இம்மூன்று சமுதாயங்களும் ஒரு மனிதனின்(ஆபிரகாம்) சந்ததியே.

ஒரே தந்தையின் மக்களாகிய இம்மூன்று சமுதாயங்களும் இன்று பிரிந்து கிடப்பது மட்டுமல்லாமல் உலகின் பிரச்சனைகளுக்கும் காரணிகளாக விளங்குகின்றன. ஏன் இவர்கள் பிரிந்துள்ளனர் என்ற கேள்வி மனதில் பலமுறை எழுந்ததுண்டு. நம்பிக்கை அடிப்படையில் சில விஷயங்கள் தெரியுமென்றாலும் அதையே மற்றொரு சமுதாயத்திற்கு எதிராக கூறுவது சரியில்லை என்பதால் அதனைக் குறித்து பிறரிடம் பேசுவதில்லை. ஒரு சமுதாயத்தைக் குறித்து கூடுதல் அறிய அவர்கள் பின்பற்றும் வேதங்களை படிப்பதே சரியான வழி.

இக்காரணங்களாலும் கூடுதல் பைபிளைக் குறித்து அறியும் ஆவலில் படிக்கத் தொடங்கினேன்.
படிக்கப் படிக்க பல ஆச்சரியங்கள், பல சந்தேகங்கள், பல கேள்விகள்(அது தானே நம் பணி).

எனக்கு நண்பர்கள் வட்டம் என்று எடுத்துக் கொண்டால் மீனவர்களும், ஆசாரிகளும் தான் அதிகம். உண்மையில் கிறிஸ்தவ மீனவ நண்பர்களுக்கு பைபிள் என ஒன்று இருப்பதே ஞாயிறுகளில் தான் நினைவுக்கு வரும். அதுவும் பள்ளியில் பாஸ்டர் என்ன படிக்கிறாரோ அதைக் கேட்பதோடு சரி. எனக்கு எழுந்த சந்தேகங்களையும் கேள்விகளையும் கேட்டபொழுது அவர்கள் கூறிய பதில் - "போடேய் ஒனக்கு வேற வேலயில்ல! எவன் இங்க இதெல்லாம் படிக்கான்!". எனக்கு சிரிக்கவா அழவா என்று தெரியவில்லை. இருந்தும் பல வழிகளில் எனக்கு எழுந்த சந்தேகங்களுக்கு விடை காண முயண்றேன். இது வரை கிடைக்கவில்லை. சரி இங்கேயாவது விடை கிடைக்கிறதா பார்ப்போம் என்று எனக்கு எழுந்த கேள்விகளை ஆதாரத்துடன் இங்கு குறிப்பிடுகிறேன். தெரிந்தவர்கள் பதிலிடுங்களேன்.

1. ஆபிராம் தொண்ணூற்றொன்பது வயதானபோது, கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி, நான் சர்வவல்லமையுள்ள தேவன்! நீ எனக்கு முன்பாக நடந்து கொண்டு உத்தமனாயிரு.
2. நான் உனக்கும் எனக்கும் நடுவாக என் உடன்படிக்கையை ஏற்படுத்தி, உன்னை மிகவும் திரளாய்ப் பெருகப்பண்ணுவேன் என்றார்.
3. அப்பொழுது ஆபிராம் முகங்குப்புற விழுந்து வணங்கினான்@ தேவன் அவனோடே பேசி:
4. நான் உன்னோடே பண்ணுகிற என் உடன்படிக்கை என்னவென்றால், நீ திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாவாய்.
5. இனி உன் பேர் ஆபிராம் என்னப்படாமல், நான் உன்னைத் திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாக ஏற்படுத்தினபடியால், உன் பேர் ஆபிரகாம் என்னப்படும்.
6. உன்னை மிகவும் அதிகமாய்ப் பலுகப்பண்ணி, உன்னிலே ஜாதிகளை உண்டாக்குவேன்@ உன்னிடத்திலிருந்து ராஜாக்கள் தோன்றுவார்கள்.
7. உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நான் தேவனாயிருக்கும்படி எனக்கும் உனக்கும், உனக்குப்பின் தலைமுறை தலைமுறையாக வரும் உன் சந்ததிக்கும் நடுவே, என் உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன்.
8. நீ பரதேசியாய்த் தங்கிவருகிற கானான் தேசமுழுவதையும், உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நித்திய சுதந்திரமாகக் கொடுத்து, நான் அவர்களுக்குத் தேவனாயிருப்பேன் என்றார்.
9. பின்னும் தேவன் ஆபிரகாமை நோக்கி: இப்பொழுது நீயும், உனக்குப் பின் தலைமுறை தலைமுறையாக வரும் உன் சந்ததியும், என் உடன்படிக்கையைக் கைக்கொள்ளுங்கள்.
10. எனக்கும் உங்களுக்கும், உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நடுவே உண்டாகிறதும், நீங்கள் கைக்கொள்ளவேண்டியதுமான என் உடன்படிக்கை என்னவென்றால், உங்களுக்குள் பிறக்கும் சகல ஆண்பிள்ளைகளும் விருத்தசேதனம் பண்ணப்படவேண்டும்
11. உங்கள் நுனித்தோலின் மாம்சத்தை விருத்தசேதனம்பண்ணக்கடவீர்கள். அது எனக்கும் உங்களுக்குமுள்ள உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும்.
12. உங்களில் தலைமுறை தலைமுறையாகப் பிறக்கும் ஆண்பிள்ளைகளெல்லாம் எட்டாம்நாளிலே விருத்தசேதனம்பண்ணப்படவேண்டும்@ வீட்டிலே பிறந்த பிள்ளையும் உன் வித்தல்லாத அந்நியனிடத்தில் பணத்திற்குக் கொள்ளப்பட்ட எந்தப் பிள்ளையும், அப்படியே விருத்தசேதனம்பண்ணப்படவேண்டும்.
13. உன் வீட்டிலே பிறந்த பிள்ளையும், உன் பணத்திற்குக் கொள்ளப்பட்டவனும் விருத்தசேதனம் பண்ணவேண்டியது அவசியம்@ இப்படி என் உடன்படிக்கை உங்கள் மாம்சத்திலே நித்திய உடன்படிக்கையாக இருக்கக்கடவது.
14. நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம்பண்ணப்படாதிருக்கிற நுனித்தோலுள்ள ஆண்பிள்ளையிருந்தால், அந்த ஆத்துமா என் உடன்படிக்கையை மீறினபடியால், தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான் என்றார். [ஆதியாகமம் (17:1௧4) ]

23. அப்பொழுது ஆபிரகாம் தன் குமாரனாகிய இஸ்மவேலையும், தன் வீட்டிலே பிறந்த யாவரையும், தான் பணத்திற்குக் கொண்ட அனைவருமாகிய தன் வீட்டிலுள்ள ஆண்பிள்ளைகள் எல்லாரையும் சேர்த்து, தேவன் தனக்குச் சொன்னபடி, அவர்கள் நுனித்தோலின் மாம்சத்தை அந்நாளிலேதானே விருத்தசேதனம்பண்ணினான்.
24. ஆபிரகாமுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம்பண்ணப்படும்போது, அவன் தொண்ணூற்றொன்பது வயதாயிருந்தான்.
25. அவனுடைய குமாரன் இஸ்மவேலுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம்பண்ணப்படும்போது, அவன் பதின்மூன்று வயதாயிருந்தான்.
26. ஒரேநாளில் ஆபிரகாமும் அவன் குமாரன் இஸ்மவேலும் விருத்தசேதனம் பண்ணப்பட்டார்கள்.
27. வீட்டிலே பிறந்தவர்களும் அந்நியரிடத்திலே பணத்திற்குக் கொள்ளப்பட்டவர்களுமாகிய அவன் வீட்டு மனுஷர்கள் எல்லாரும் அவனோடேகூட விருத்தசேதனம்பண்ணப்பட்டார்கள
[ஆதியாகமம் (17:23௨7)]


கர்த்தர் ஆபிரகாமிற்கு இடும் ஓர் கட்டளையைக் குறித்து பைபிளின் ஆதியாகமம் 17 ஆவது அத்தியாயம் குறிப்பிடுவதை மேல் வரிகள் தெரிவிக்கின்றன.

அக்கட்டளையை நிறைவேற்றினால் ஆபிரகாமின் சந்ததிகளை பெருகச் செய்வதாகவும், தவறினால் தன் ஜனத்திலிருந்து அறுப்புண்டு போவான் என்றும் இறைக் கட்டளை குறிப்பிடுகிறது.

இவ்விஷயத்தில் இன்று உலகில் முஸ்லிம்களே அக்கட்டளையை கடமையாக வைத்து நிறைவேற்றுகின்றனர் - கேள்விப்பட்டதை வைத்து சில யூதர்களும்.

ஏன் கிறிஸ்தவர்கள் என்று தன்னைக் கூறிக்கொள்பவர்கள் இக்கட்டளையை நிறைவேற்றுவதில்லை?

பைபிளைப் பின்பற்றுவதில் கிறிஸ்தவர்களை விட முஸ்லிம்கள் தானே முன்னணியில் இருக்கின்றனர்?

எனில் முஸ்லிம்கள் தானே உண்மையான கிறிஸ்தவர்கள்?

Thursday, November 10, 2005

மிருககாட்சிசாலையும் மேஜிக் ஷோவும்(தொடர்ச்சி...)

......
அந்த அரபுப் பெண்ணுடன் ஏற்பட்ட வாக்குவாதத்திற்குப் பிறகு எங்களை சுற்றி இருந்தவர்கள் ஒரு மாதிரி பார்க்க ஆரம்பித்ததால் நாங்கள் சிறிது நேரம் அமைதியானோம்(இங்குள்ள ஒரு ஸ்பெஷாலிட்டி ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் தகராறு எனில் தவறு யார் பக்கம் இருந்தாலும் போலீஸ் வந்தால் பெண்ணிடம் வம்பு செய்ததாக கூறி ஆணை கொண்டு போய் விடும். அந்த பயத்தின் காரணமாகவும் வாயை மூடினோம்.)

ஷோ தொடங்குவதற்கும் 10 நிமிடத்திற்கு முன்னால் மேடையிலிருந்து ஓர் இளைஞன் கீழே இறங்கி வந்து ஏதோ கேட்டான். யாரும் அதை கவனித்ததாக தெரியவில்லை. அவன் இன்னும் சிறிது நாங்கள் இருந்த பகுதியின் அருகில் வந்து பிரேயர் எத்தனை மணிக்கு என்று கேட்டான். ஒரு சூடானி எழுந்து "5 மணிக்கு பிரேயர் 10 நிமிடத்தில் முடிந்து விடும்" என்று பதில் கூறினார்.

என்னை மிகவும் ஆச்சரியப்பட வைக்கும் விதமாக அந்த சம்பவம் நடந்தது.மிகச் சரியாக 5 மணிக்கு ஒருவர் மைக்கின் முன் வந்து "பிரேயர் இருப்பதால் நிகழ்ச்சி 10 நிமிடம் கழித்து ஆரம்பமாகும். கால தாமதத்திற்கு மன்னிப்பு கோருகிறோம்" என்று கூறி சென்றார். (நிகழ்ச்சியை நடத்துபவர்கள் மேற்கத்தியர்கள் என்பது பின்னர் தெரிந்தது).

அவர்களுடைய பொறுப்புணர்ச்சியை கண்டு அசந்து போனேன். அந்த ஷோ ஒரு இலவச நிகழ்ச்சியாகும். 10 நிமிடம் அல்ல 1 மணி நேரம் தாமதமானாலும் யாரும் அதை அதை கேட்கப் போவதில்லை. ஆனாலும் சரியாக அவர்கள் நிகழ்ச்சி ஆரம்பமாகும் என்று விளம்பரம் செய்திருந்த நேரத்திற்கு வந்து வருத்தம் தெரிவித்ததும் பின்னர் மீண்டும் கூறியது போல் சரியாக 5.10 க்கு நிகழ்ச்சியை ஆரம்பித்த விதமும் என்னை வெகுவாக கவர்ந்தது மட்டுமல்ல, அவர்கள் மேல் ஒரு மரியாதையையும் தோற்றுவித்தது.

நாம் நிச்சயம் அவர்களிடமிருந்து இது போன்ற விஷயங்களில் நிறைய படிக்க வேண்டி இருக்கிறது. நமது நாட்டில் மட்டுமல்ல நான் இங்கே வந்ததற்கு பிறகும் நமது நாட்டு மக்களால் நடத்தப்படும் நிறைய நிகழ்ச்சிகளுக்கு சென்றிருக்கிறேன். ஒரு நிகழ்ச்சி கூட குறிப்பிட்ட சமயத்தில் தொடங்கியதாகவோ அல்லது காலதாமதமாகும் பொழுது அதற்காக வருத்தம் தெரிவித்ததையோ நான் கண்டதில்லை. நமது முன்னேற்றத்தை பாதிக்கும் விஷயத்தில் இந்த பொறுப்பின்மையும் உண்டு என்பதை நன்றாக உணர்ந்து கொண்டேன்.

நான் எதிர்பார்த்தது போல் நிகழ்ச்சி மிக நன்றாக இருந்தது. குழந்தைகள் அதிகம் இருந்ததால் அவர்களை கவர சில பபூன்களை வடிவமைத்து அரங்கம் முழுவதும் உலவ விட்டிருந்தார்கள். அவர்களுடைய நிகழ்ச்சியை வந்திருந்த அனைவரும் மிக விரும்பி கண்டு களித்ததை அவர்களுடைய சந்தோஷமான முகம் காட்டியது. ஆனால் நான் வந்தது அதற்கல்லவே.

மேஜிக் எனில் கண்கட்டு வித்தை எனவும், பார்வையாளர்களை ஹிப்னடைஸ் செய்து அவர்களின் முன் இல்லாததை இருப்பதாக காண்பிப்பது எனவும் பலர் கூறி கேட்டிருந்ததால் நாங்கள் மிக கவனமுடன் அவர்கள் நிகழ்ச்சியை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தோன். அதிக எஞ்ஜாய் மூடில் வரும்பொழுது தன் சுற்றுபுறத்தை மனிதர்கள் மறப்பார்கள் என்ற மிக எளிய சித்தாந்தத்தை அருமையாக பயன்படுத்தி அவர்கள் அந்நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினர்.

ஒரு பெண்ணை இரு துண்டுகளாக ஆக்கியது, மாயமாக மறைய வைத்தது, ஒரு சிறிய பெட்டியில் வைத்து அப்பெட்டியின் எல்லா பாகங்களிலிருந்தும் ஏழெட்டு வாட்களைக் கொண்டு குத்தி செருகியது என பல மெய்சிலிர்க்க வைக்கும் காட்ச்சிகளை மிகத் தத்ரூபமாக செய்து கண்பித்தனர். மிக கவனமாக அவர்கள் எப்படி அதை செய்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்கும் நோக்கில் கூட்டத்தின் சந்தோஷ மூடில் கலராமல் நாங்கள் இருந்ததால் மிக எளிதாக அவர்களின் ட்ரிக்ஸை கண்டுபிடித்தோம்.

நிகழ்ச்சி ரொம்பவும் கலகலப்பாக போய் கொண்டிருந்தது. ஒவ்வொரு நிகழ்ச்சி முடியும் பொழுதும் சிறிது இடைவெளியும் விடாமல் அடுத்த நிகழ்ச்சி, அடுத்த நிகழ்ச்சி என்று வேகமாக போய் கொண்டிருந்தது. திடீரென மேடையில் ஐந்தாறு பெண்கள் தோன்றினர்(அவர்களுக்கே உரிய ஹாலிவுட் சினிமா உடைகளில்). ஏதோ அவர்களை வைத்து மேஜிக் செய்யப்போவதாக நினைத்துக் கொண்டிருந்தால் எங்கள் எண்ணம் தவறானது. ஒரு பத்து நிமிடம் மேடையில் என்ன நடக்கிறது என்றே நம்ப முடியவில்லை. மேஜிக் ஷோவுக்கு எவ்வித சம்பந்தமும் இல்லாமல் மேடையில் அவர்கள் சுழன்று நடனமாட ஆரம்பித்தனர்.

மேடையின் முன் சிறிய பச்சிளங் குழந்தைகளும், குடும்பங்களும், சற்று தள்ளி வருடக் கணக்கில் மனைவிகளை பிரிந்து வந்து வேலை செய்யும் இளைஞர்களும் இருக்கின்றனர் என்ற எண்ணம் சிறிதும் மனதில் இன்றி படு மோசமான உடையில் சுற்றுபுறத்தை மறந்து கீ கொடுத்த பொம்மைகளைப் போன்று அவர்கள் பாட்டிற்கு ஆடிக் கொண்டிருந்தனர்.

10 நிமிடத்திற்கு பின் மீண்டும் ஒன்றுமே நடவாதது போல் மேஜிக் ஷோ தொடர ஆரம்பித்தது. பின்னர் நிகழ்ச்சி முடியும் வரை அங்கு நடந்தது ஒன்றும் எங்கள் நினைவில் இல்லை. எங்கள் மனம் முழுதும் பலவிதமான கேள்விகளே எஞ்சி நின்றன.

அவர்கள் இப்படி காபரேயை ஒத்த ஒரு நடனத்தை குழந்தைகளுடைய மேஜிக் நிகழ்ச்சியில் ஆட காரணம் என்ன?

அவர்கள் இதன் மூலம் என்ன எதிர்பார்க்கிறார்கள்?


வளர்ந்து வரும் குழந்தை பருவத்திலேயே இதையெல்லாம் குடும்பத்தோடு ரசித்து பார்ப்பது தான் வாழ்க்கை என்ற அவர்களின் கலாச்சாரத்தை குழந்தைகளின் மனதில் ஊட்ட நினைக்கிறார்களா?

சாதாரண ஒரு நிகழ்ச்சிக்கே டிக்கட் போட்டு பணம் உண்டாக்கும் தற்போதைய வியாபார உலகில் தொடந்து 4 நாட்கள் இப்படி ஒரு ப்ரீ ஷோ நடத்த காரணம் என்ன?


மனதில் இன்னும் பலவிதமான சந்தேகங்களோடும், கேள்விகளோடும் -
ஆரம்பத்தில் அவர்கள் மேல் எழுந்த மரியாதையை தூக்கி தூர எறிந்தவர்களாக மேற்கை நினைத்து நொந்து கொண்டு.......

Wednesday, November 09, 2005

என் பென்னின் கதை

நான் 4-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயம். ஏதோ குருட்டாம் போக்கில் முதல் வகுப்பிலிருந்தே முதல் மாணவனாக இருந்தேன். முதல் இரு வகுப்புகள் தாய் மாமாவின் வீட்டில் நின்று படித்துக் கொண்டிருந்தேன். தொடர்ந்து என்னைப் பிரிந்து இருக்க என் தாய் சம்மதிக்காததால் மூன்றாம் வகுப்பிலிருந்து பெற்றோர்களுடன் இருந்து படிக்க சென்று கொண்டிருந்தேன். முதல் வகுப்பு படிக்கும் சமயத்திலிருந்தே படிப்பிற்கு என்னை உற்சாகமூட்டுவதில் மாமா பெரும் பங்காற்றினார்.

அப்பொழுது என்னுடைய தாயின் வீட்டிற்கும் தாய் மாமா வீட்டிற்கும் 16 கிலோ மீட்டர் தூரம் இருந்தது. நான் பெற்றோர்களுடன் இருந்தாலும் என்னை அடிக்கடி மாமா வந்து பார்த்து செல்வார். வரும் பொழுதெல்லாம் என் படிப்பைக் குறித்து விசாரிக்க தவறுவதில்லை. நானும் என் மதிப்பெண் பட்டியல் வரும் பொழுதெல்லாம் அதனை மாமாவிடம் காட்டாமல் வகுப்பில் திருப்பி கொடுப்பதில்லை.

அப்பொழுதும் அப்படித்தான். 4-ஆம் வப்பின் அரையாண்டுத் தேர்வின் மதிப்பெண் பட்டியல் வந்திருந்தது. வழக்கம் போல் முதல் தரம் தான். அந்நேரம் எதேச்சையாக எங்கள் மாமாவும் எங்களை காண வந்திருந்தார். மிகுந்த குதூகலத்துடன் மதிப்பெண் பட்டியலை மாமாவிடம் காண்பித்தேன்.
மாமா என்னை ரொம்பவும் பாராட்டி ஒரு ஹீரோ பென் பரிசாக தந்தார். இப்பொழுதும் அதன் அழகை மறக்க முடியவில்லை. என் வாழ்நாளில் எனக்கு எப்படிப் பட்ட வெகுமதிகள் கிடைத்திருந்தாலும் அதற்கு ஒப்பாகாது. முழுவதும் தங்க முலாம் பூசப்பட்டது போல் முழுக்க கோல்டன் கலரில் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. இந்நேரம் ஒன்றைக் குறிப்பிட்டாக வேண்டும். அக்காலத்தில் எழுதுவதற்கு பெரும்பாலும் நான் பயன்படுத்தியிருந்தது பென்சிலைத் தான். எப்பொழுதாவது என் பிஞ்சு பருவ மறக்க முடியாத நண்பன் செய்யது அலீம் ராஜாவிடமிருந்து ரீபில் வாங்கி பயன்படுத்துவேன்.இப்பென் கிடைத்ததும் எனக்கு தலை கால் புரியவில்லை.

அப்பொழுது எனது சகோதரன் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். அவனுக்கே ஹீரோ பென் இல்லை, பிறகு உனக்கு எதற்கு என்று கேட்ட தந்தையிடம் அடம்பிடித்து நானே அதை வைத்துக் கொண்டேன்.
ஏற்கெனவே வகுப்பில் நான் முதல் மாணவன்; தற்போது இப்பென்னும் என்னுடன் சேர்ந்து கர்வத்துடன் சுற்ற ஆரம்பித்தது. யாருக்கும் அதை தொட்டு பார்க்கக் கூட கொடுக்க மாட்டேன், என் இனிய நண்பனை தவிர.

ஒருநாள் அவனுக்கு எழுதக் கொடுத்த பென்னை திரும்ப வாங்க மறந்து விட்டேன். அவனும் மறந்து அதைக் கொண்டு சென்று விட்டான். என் நல்ல நேரம் அன்று பார்த்து இரவு நான் தூங்கிய பிறகு வேலை முடிந்து வந்த என் தந்தை ஏதோ எழுதுவதற்கு அப்பென்னை தேடியிருக்கிறார். வேறு ஏதோ கோபத்தில் இருந்திருப்பார் போல தோன்றுகிறது, எனக்கு உறக்கத்திலேயே உதை விழுந்தது.

நானும் நல்ல உறக்க கலக்கத்தில் இருந்ததால் பென்னை தொலைத்து விட்டதாக நினைத்து பென் எங்கே என்று கேட்ட போது மலங்க மலங்க விழித்துக் கொண்டு நின்றிருந்தேன். அடி என்றால் அப்படி அடி, உடம்பெல்லாம் ஆங்காங்கே சாப்பிடமுடியாத கொழுக்கட்டைகளாக விழுந்தது.

மறுநாள் வழக்கம் போல் காலை 6 மணிக்கு எழுந்து வீட்டு திண்ணையில் இருந்து படித்துக் கொண்டிருக்கிறேன். திடீரென என் நண்பன் அந்த பென்னைக் கொண்டு வந்து மறந்து கொண்டு சென்றுவிட்டதாக கூறி தந்து விட்டு சென்று விட்டான். எனக்கு என்ன நடக்கிறது என்றே நம்ப முடியவில்லை. கிடைத்த அடியெல்லாம் ஒரு நொடியில் மறந்து விட்டது. ஏதோ புதையல் கிடைத்தது போல் மிகுந்த சந்தோசத்தோடு அடி விழுந்திருந்த இடங்களை தடவிக் கொண்டே பென்னை என் தாயிடம் கொண்டு காண்பித்தேன்.

ஒன்றும் கூறாமல் தந்தை அதை வாங்கிக் கொண்டு சென்று விட்டார். பின்னர் அதனை நான் காணவே இல்லை. உண்மையில் அடியால் வேதனித்து அழுததை விட என் பென் திரும்பக் கிடைக்காததால் நிறைய அழுதேன்(பின்னே தலைகால் புரியாமல் அல்லவா வகுப்பில் கொட்டமடித்தேன்).

பொறுக்க முடியாமல் ஒருநாள் தாயிடம் கேட்டேன். கிடைத்த பதில் - தந்தை வேலைக்கு கொண்டு சென்ற இடத்தில் அதை தொலைத்து விட்டதாக!
செய்யாத தவறுக்கு உறக்கத்திலேயே நான் தண்டிக்கப் பட்டேன். செய்த தவறுக்கு என் தந்தையை யார் தண்டிப்பார்?

(பி.கு) தந்தை மீது குற்றம் சுமத்துவதல்ல இப்பதிவின் நோக்கம். இவ்வுலகில் நீதி மனிதர்களால் நடப்பாக்க முடிவதில்லை என்பதையும், தவறு செய்யாதவர்கள் அவசரப்பட்டு தண்டிக்கப் படுகிறார்கள் என்பதையும் உணர்த்துவது மட்டுமே இப்பதிவின் முக்கிய குறிகோள்.

மிருககாட்சிசாலையும் மேஜிக் ஷோவும்

கடந்த ஈத் அன்று மிருககாட்சி சாலைக்கு செல்ல முடிவெடுத்தோம். முன்பொருமுறை எனது தம்பியும் நண்பனும் சென்று விட்டு வந்து ஒரு சிம்பன்சி குரங்கின் சேட்டையைப் பற்றி கூறியிருந்ததால் அதைக் காண வேண்டும் என்று அன்றிலிருந்தே நினைத்துக் கொண்டிருந்தேன். மேலும் அன்று அங்கு ஒரு மேஜிக் ஷோ நடப்பதாகவும் கூறினார்கள். மேஜிக் ஷோ நடத்துபவர்கள் பார்வையாளர்களை சாமர்த்தியமாக ஏமாற்றுகிறார்கள் என்பது என் எண்ணம். என்றாவது ஒரு நாள் நேரில் ஒரு மேஜிக் ஷோவைப் பார்த்து அதைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆவலும் நெடுநாட்களாக மனதில் இருந்தது.

இரண்டு ஆசைகள் ஒரே சமயத்தில் நிறைவேறுவதால் உடனே சம்மதித்து அவர்களுடன் கிளம்பினேன். விடுமுறை நாள் ஆனதால் கத்தரில் உள்ள மொத்த பணியாளர்களும் அங்கு வந்திருப்பதாக எண்ணும் விதத்தில்(இங்கே இதை விட பிரயோஜனமாக பொழுது போக்கும் இடம் ஒன்று கூட இல்லை என்பதால்) ஆள் கூட்டம் மிக அதிகமாக இருந்தது. நண்பனின் மனைவியும் கூட வந்திருந்ததால் நுழைவுச் சீட்டு எடுப்பதில் சிரமம் இருக்கவில்லை. பேமிலி கௌண்டரின் வழி எளிதில் நுழைந்தோம்.

பல கோடிகளை செலவளித்து மிக நன்றாக வைத்திருந்தார்கள். மேஜிக் ஷோ 5 மணிக்கு தான் ஆரம்பம் என்று கூறியதால் சந்தோசமாக எல்லா மிருகங்களையும் கண்டு ரசித்தோம். அதில் அந்த சிம்பன்சி குரங்குகளை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். அவை இரண்டும் அடித்த லூட்டியில் அவ்விடம் விட்டு வரவே மனம் வரவில்லை. நேரமானால் இடம் கிடைக்காது என்பதால் பிரிய மனம் இல்லாமல் அவ்விடம் விட்டு மேஜி ஷோ நடக்கும் இடத்திற்கு வந்தோம்.

அங்கு இளைஞர்கள் அத்தனை பேரையும் வெளியே நிறுத்தியிருந்தார்கள். பேமிலிக்கு மட்டும் தான் இருக்கை கொடுப்பார்களாம். பேச்சலர் வெளியில் நின்று பார்க்க வேண்டியது தான். இங்கும் நண்பனின் மனைவியின் தயவால் எங்களையொத்த வயதுடையவர்கள் தேமே என்று விளித்து நிற்க ஒரு தொந்தரவும் இன்றி சுகமாக இருக்கையில் சென்று அமர்ந்தோம். அந்த இடம் முழுவதும் குழந்தைகளின் குதூகலம் நிறைந்திருந்தது.

நாங்களும் அவர்களுடன் இணைந்து கலகலவென ஓயாமல் பேசி சிரித்துக் கொண்டிருந்தோம். இங்கே வேலைக்கு வந்து இந்த இரண்டு வருடங்களில் மிக சந்தோசமான தருணங்கள் அவை. திடீரென ஒரு குரல் அரபியும் ஆங்கிலமும் கலந்து-

"ஏய்! உங்களால் ஒரு நிமிடம் பேசாமல் இருக்க முடியாதா?".

எங்களுக்கு முன்வரிசையில் ஒரு அரேபிய பெண் தனது குழந்தைகளுடன் அமர்ந்திருந்தாள். அவளிடமிருந்து தான் இக்குரல் வந்தது. எனக்கு ஒரு நிமிடம் ஒன்றும் பேச வரவில்லை. இரண்டாயிரத்திற்கும் மேல் ஆட்கள் கூடியிருக்கும் இடத்தில் ஒரு பெண் இப்படி கேட்டால் என்ன சொல்ல தோன்றும்?. பின்னர் நடந்த உரையாடலை அப்படியே தருகிறேன்.

எனது தம்பி : அதனால் உனக்கு என்ன கஷ்டம்?
அந்த பெண் : பேசாமல் இரு காது அடைக்கிறது.
நான் : பொது இடம் என்றால் அப்படித் தான் இருக்கும். நாங்கள் உங்கள் வீட்டில் ஒன்றும் இருக்கவில்லையே?
அந்த பெண் : ஹிந்திகள் எல்லாம் மோசமானவர்கள். எல்லோரும் இந்தியாவிற்கு போங்கள்.
நான் : சென்று கத்தர் அரசாங்கத்திடம் சொல்.

அதோடு அப்பெண் எழுந்து தனது குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு வேறு இருக்கைக்கு மாறி சென்று விட்டாள்.

இஸ்லாம் பர்தாவின் மூலம் பெண்களை அடிமையாக்கி வைத்துள்ளது என்ற அறிவிலிகளின் பிரச்சாரத்தை காணும் பொழுது எனக்கு உடன் இந்த சம்பவம் தான் நினைவுக்கு வருகிறது.

ஆமாம், இந்தியன் முஸ்லிம்களுக்கு இந்தியாவிலும் இடமில்லை!, பாகிஸ்தானிலும் இடமில்லை! இதோ அரபு தேசத்திலும் இடமில்லை!சங்க்பரிவாரத்தினர் கூறுவது போல் கபுறுஸ்தானுக்கு(மண்ணுக்கு அடியில்) போக வேண்டியது தானா?

Monday, November 07, 2005

அறிமுகம்

பெயரைப் பார்த்து வந்தவர்களுக்கு முதலில் நல்வரவு!

என்ன எழுதுவது, எப்படி எழுதுவது என்று யோசித்துக் கொண்டிருப்பதை விட மனதில் தோன்றுவதை அப்படியே எழுதினால் என்ன என்று தோன்றியதால் நானும் எனக்கென ஒரு வலைப்பதிவுடன் உங்கள் முன் வருகிறேன். ஆரம்பத்திலேயே ஒன்றை கூறி விடுவது நலம்.

மனதில் தோன்றுவதை அப்படியே எழுதப் போவதால் இங்கு கோர்வையான எழுத்து நடையை எதிர்பார்ப்பவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சப்போகிறது. வாயில் வருவதை கையால் கிறுக்கப்(அடிக்கப்) போகிறேன் அவ்வளவே.

படித்தவை, பார்த்தவை, கேட்டவை, அனுபவப்பட்டவைகளில் மனதில் எழுந்த சந்தேகங்களை கேள்விகளாக தொடுப்பது தான் இவ்வலைப்பதிவின் நோக்கம். இதில் யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கம் அறவே இல்லை. கேள்வி கேட்பதையே பிரதான நோக்கமாக கொண்டிருப்பதால் இப்பெயரை தேர்ந்தெடுத்தேன் - பொருத்தமாக இருக்கட்டும் என்று.

யார்யாரெல்லாமோ (இரண்டாம் வகுப்பு படிக்கும் குட்டிப் பாப்பா வரை) பதிக்கும் போது தடிமாடு போல் வளர்ந்த எனக்கு மட்டும் பதிப்பதற்கு ஒன்று கூட கிடைக்காதா என்ன? விரைவில் வருகிறேன் முதல் கேள்வியுடன்

அன்புடன் பகுத்தறிவாளன்.