கடந்த ஈத் அன்று மிருககாட்சி சாலைக்கு செல்ல முடிவெடுத்தோம். முன்பொருமுறை எனது தம்பியும் நண்பனும் சென்று விட்டு வந்து ஒரு சிம்பன்சி குரங்கின் சேட்டையைப் பற்றி கூறியிருந்ததால் அதைக் காண வேண்டும் என்று அன்றிலிருந்தே நினைத்துக் கொண்டிருந்தேன். மேலும் அன்று அங்கு ஒரு மேஜிக் ஷோ நடப்பதாகவும் கூறினார்கள். மேஜிக் ஷோ நடத்துபவர்கள் பார்வையாளர்களை சாமர்த்தியமாக ஏமாற்றுகிறார்கள் என்பது என் எண்ணம். என்றாவது ஒரு நாள் நேரில் ஒரு மேஜிக் ஷோவைப் பார்த்து அதைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆவலும் நெடுநாட்களாக மனதில் இருந்தது.
இரண்டு ஆசைகள் ஒரே சமயத்தில் நிறைவேறுவதால் உடனே சம்மதித்து அவர்களுடன் கிளம்பினேன். விடுமுறை நாள் ஆனதால் கத்தரில் உள்ள மொத்த பணியாளர்களும் அங்கு வந்திருப்பதாக எண்ணும் விதத்தில்(இங்கே இதை விட பிரயோஜனமாக பொழுது போக்கும் இடம் ஒன்று கூட இல்லை என்பதால்) ஆள் கூட்டம் மிக அதிகமாக இருந்தது. நண்பனின் மனைவியும் கூட வந்திருந்ததால் நுழைவுச் சீட்டு எடுப்பதில் சிரமம் இருக்கவில்லை. பேமிலி கௌண்டரின் வழி எளிதில் நுழைந்தோம்.
பல கோடிகளை செலவளித்து மிக நன்றாக வைத்திருந்தார்கள். மேஜிக் ஷோ 5 மணிக்கு தான் ஆரம்பம் என்று கூறியதால் சந்தோசமாக எல்லா மிருகங்களையும் கண்டு ரசித்தோம். அதில் அந்த சிம்பன்சி குரங்குகளை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். அவை இரண்டும் அடித்த லூட்டியில் அவ்விடம் விட்டு வரவே மனம் வரவில்லை. நேரமானால் இடம் கிடைக்காது என்பதால் பிரிய மனம் இல்லாமல் அவ்விடம் விட்டு மேஜி ஷோ நடக்கும் இடத்திற்கு வந்தோம்.
அங்கு இளைஞர்கள் அத்தனை பேரையும் வெளியே நிறுத்தியிருந்தார்கள். பேமிலிக்கு மட்டும் தான் இருக்கை கொடுப்பார்களாம். பேச்சலர் வெளியில் நின்று பார்க்க வேண்டியது தான். இங்கும் நண்பனின் மனைவியின் தயவால் எங்களையொத்த வயதுடையவர்கள் தேமே என்று விளித்து நிற்க ஒரு தொந்தரவும் இன்றி சுகமாக இருக்கையில் சென்று அமர்ந்தோம். அந்த இடம் முழுவதும் குழந்தைகளின் குதூகலம் நிறைந்திருந்தது.
நாங்களும் அவர்களுடன் இணைந்து கலகலவென ஓயாமல் பேசி சிரித்துக் கொண்டிருந்தோம். இங்கே வேலைக்கு வந்து இந்த இரண்டு வருடங்களில் மிக சந்தோசமான தருணங்கள் அவை. திடீரென ஒரு குரல் அரபியும் ஆங்கிலமும் கலந்து-
"ஏய்! உங்களால் ஒரு நிமிடம் பேசாமல் இருக்க முடியாதா?".
எங்களுக்கு முன்வரிசையில் ஒரு அரேபிய பெண் தனது குழந்தைகளுடன் அமர்ந்திருந்தாள். அவளிடமிருந்து தான் இக்குரல் வந்தது. எனக்கு ஒரு நிமிடம் ஒன்றும் பேச வரவில்லை. இரண்டாயிரத்திற்கும் மேல் ஆட்கள் கூடியிருக்கும் இடத்தில் ஒரு பெண் இப்படி கேட்டால் என்ன சொல்ல தோன்றும்?. பின்னர் நடந்த உரையாடலை அப்படியே தருகிறேன்.
எனது தம்பி : அதனால் உனக்கு என்ன கஷ்டம்?
அந்த பெண் : பேசாமல் இரு காது அடைக்கிறது.
நான் : பொது இடம் என்றால் அப்படித் தான் இருக்கும். நாங்கள் உங்கள் வீட்டில் ஒன்றும் இருக்கவில்லையே?
அந்த பெண் : ஹிந்திகள் எல்லாம் மோசமானவர்கள். எல்லோரும் இந்தியாவிற்கு போங்கள்.
நான் : சென்று கத்தர் அரசாங்கத்திடம் சொல்.
அதோடு அப்பெண் எழுந்து தனது குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு வேறு இருக்கைக்கு மாறி சென்று விட்டாள்.
இஸ்லாம் பர்தாவின் மூலம் பெண்களை அடிமையாக்கி வைத்துள்ளது என்ற அறிவிலிகளின் பிரச்சாரத்தை காணும் பொழுது எனக்கு உடன் இந்த சம்பவம் தான் நினைவுக்கு வருகிறது.
ஆமாம், இந்தியன் முஸ்லிம்களுக்கு இந்தியாவிலும் இடமில்லை!, பாகிஸ்தானிலும் இடமில்லை! இதோ அரபு தேசத்திலும் இடமில்லை!சங்க்பரிவாரத்தினர் கூறுவது போல் கபுறுஸ்தானுக்கு(மண்ணுக்கு அடியில்) போக வேண்டியது தானா?
Wednesday, November 09, 2005
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment