Thursday, November 10, 2005

மிருககாட்சிசாலையும் மேஜிக் ஷோவும்(தொடர்ச்சி...)

......
அந்த அரபுப் பெண்ணுடன் ஏற்பட்ட வாக்குவாதத்திற்குப் பிறகு எங்களை சுற்றி இருந்தவர்கள் ஒரு மாதிரி பார்க்க ஆரம்பித்ததால் நாங்கள் சிறிது நேரம் அமைதியானோம்(இங்குள்ள ஒரு ஸ்பெஷாலிட்டி ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் தகராறு எனில் தவறு யார் பக்கம் இருந்தாலும் போலீஸ் வந்தால் பெண்ணிடம் வம்பு செய்ததாக கூறி ஆணை கொண்டு போய் விடும். அந்த பயத்தின் காரணமாகவும் வாயை மூடினோம்.)

ஷோ தொடங்குவதற்கும் 10 நிமிடத்திற்கு முன்னால் மேடையிலிருந்து ஓர் இளைஞன் கீழே இறங்கி வந்து ஏதோ கேட்டான். யாரும் அதை கவனித்ததாக தெரியவில்லை. அவன் இன்னும் சிறிது நாங்கள் இருந்த பகுதியின் அருகில் வந்து பிரேயர் எத்தனை மணிக்கு என்று கேட்டான். ஒரு சூடானி எழுந்து "5 மணிக்கு பிரேயர் 10 நிமிடத்தில் முடிந்து விடும்" என்று பதில் கூறினார்.

என்னை மிகவும் ஆச்சரியப்பட வைக்கும் விதமாக அந்த சம்பவம் நடந்தது.மிகச் சரியாக 5 மணிக்கு ஒருவர் மைக்கின் முன் வந்து "பிரேயர் இருப்பதால் நிகழ்ச்சி 10 நிமிடம் கழித்து ஆரம்பமாகும். கால தாமதத்திற்கு மன்னிப்பு கோருகிறோம்" என்று கூறி சென்றார். (நிகழ்ச்சியை நடத்துபவர்கள் மேற்கத்தியர்கள் என்பது பின்னர் தெரிந்தது).

அவர்களுடைய பொறுப்புணர்ச்சியை கண்டு அசந்து போனேன். அந்த ஷோ ஒரு இலவச நிகழ்ச்சியாகும். 10 நிமிடம் அல்ல 1 மணி நேரம் தாமதமானாலும் யாரும் அதை அதை கேட்கப் போவதில்லை. ஆனாலும் சரியாக அவர்கள் நிகழ்ச்சி ஆரம்பமாகும் என்று விளம்பரம் செய்திருந்த நேரத்திற்கு வந்து வருத்தம் தெரிவித்ததும் பின்னர் மீண்டும் கூறியது போல் சரியாக 5.10 க்கு நிகழ்ச்சியை ஆரம்பித்த விதமும் என்னை வெகுவாக கவர்ந்தது மட்டுமல்ல, அவர்கள் மேல் ஒரு மரியாதையையும் தோற்றுவித்தது.

நாம் நிச்சயம் அவர்களிடமிருந்து இது போன்ற விஷயங்களில் நிறைய படிக்க வேண்டி இருக்கிறது. நமது நாட்டில் மட்டுமல்ல நான் இங்கே வந்ததற்கு பிறகும் நமது நாட்டு மக்களால் நடத்தப்படும் நிறைய நிகழ்ச்சிகளுக்கு சென்றிருக்கிறேன். ஒரு நிகழ்ச்சி கூட குறிப்பிட்ட சமயத்தில் தொடங்கியதாகவோ அல்லது காலதாமதமாகும் பொழுது அதற்காக வருத்தம் தெரிவித்ததையோ நான் கண்டதில்லை. நமது முன்னேற்றத்தை பாதிக்கும் விஷயத்தில் இந்த பொறுப்பின்மையும் உண்டு என்பதை நன்றாக உணர்ந்து கொண்டேன்.

நான் எதிர்பார்த்தது போல் நிகழ்ச்சி மிக நன்றாக இருந்தது. குழந்தைகள் அதிகம் இருந்ததால் அவர்களை கவர சில பபூன்களை வடிவமைத்து அரங்கம் முழுவதும் உலவ விட்டிருந்தார்கள். அவர்களுடைய நிகழ்ச்சியை வந்திருந்த அனைவரும் மிக விரும்பி கண்டு களித்ததை அவர்களுடைய சந்தோஷமான முகம் காட்டியது. ஆனால் நான் வந்தது அதற்கல்லவே.

மேஜிக் எனில் கண்கட்டு வித்தை எனவும், பார்வையாளர்களை ஹிப்னடைஸ் செய்து அவர்களின் முன் இல்லாததை இருப்பதாக காண்பிப்பது எனவும் பலர் கூறி கேட்டிருந்ததால் நாங்கள் மிக கவனமுடன் அவர்கள் நிகழ்ச்சியை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தோன். அதிக எஞ்ஜாய் மூடில் வரும்பொழுது தன் சுற்றுபுறத்தை மனிதர்கள் மறப்பார்கள் என்ற மிக எளிய சித்தாந்தத்தை அருமையாக பயன்படுத்தி அவர்கள் அந்நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினர்.

ஒரு பெண்ணை இரு துண்டுகளாக ஆக்கியது, மாயமாக மறைய வைத்தது, ஒரு சிறிய பெட்டியில் வைத்து அப்பெட்டியின் எல்லா பாகங்களிலிருந்தும் ஏழெட்டு வாட்களைக் கொண்டு குத்தி செருகியது என பல மெய்சிலிர்க்க வைக்கும் காட்ச்சிகளை மிகத் தத்ரூபமாக செய்து கண்பித்தனர். மிக கவனமாக அவர்கள் எப்படி அதை செய்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்கும் நோக்கில் கூட்டத்தின் சந்தோஷ மூடில் கலராமல் நாங்கள் இருந்ததால் மிக எளிதாக அவர்களின் ட்ரிக்ஸை கண்டுபிடித்தோம்.

நிகழ்ச்சி ரொம்பவும் கலகலப்பாக போய் கொண்டிருந்தது. ஒவ்வொரு நிகழ்ச்சி முடியும் பொழுதும் சிறிது இடைவெளியும் விடாமல் அடுத்த நிகழ்ச்சி, அடுத்த நிகழ்ச்சி என்று வேகமாக போய் கொண்டிருந்தது. திடீரென மேடையில் ஐந்தாறு பெண்கள் தோன்றினர்(அவர்களுக்கே உரிய ஹாலிவுட் சினிமா உடைகளில்). ஏதோ அவர்களை வைத்து மேஜிக் செய்யப்போவதாக நினைத்துக் கொண்டிருந்தால் எங்கள் எண்ணம் தவறானது. ஒரு பத்து நிமிடம் மேடையில் என்ன நடக்கிறது என்றே நம்ப முடியவில்லை. மேஜிக் ஷோவுக்கு எவ்வித சம்பந்தமும் இல்லாமல் மேடையில் அவர்கள் சுழன்று நடனமாட ஆரம்பித்தனர்.

மேடையின் முன் சிறிய பச்சிளங் குழந்தைகளும், குடும்பங்களும், சற்று தள்ளி வருடக் கணக்கில் மனைவிகளை பிரிந்து வந்து வேலை செய்யும் இளைஞர்களும் இருக்கின்றனர் என்ற எண்ணம் சிறிதும் மனதில் இன்றி படு மோசமான உடையில் சுற்றுபுறத்தை மறந்து கீ கொடுத்த பொம்மைகளைப் போன்று அவர்கள் பாட்டிற்கு ஆடிக் கொண்டிருந்தனர்.

10 நிமிடத்திற்கு பின் மீண்டும் ஒன்றுமே நடவாதது போல் மேஜிக் ஷோ தொடர ஆரம்பித்தது. பின்னர் நிகழ்ச்சி முடியும் வரை அங்கு நடந்தது ஒன்றும் எங்கள் நினைவில் இல்லை. எங்கள் மனம் முழுதும் பலவிதமான கேள்விகளே எஞ்சி நின்றன.

அவர்கள் இப்படி காபரேயை ஒத்த ஒரு நடனத்தை குழந்தைகளுடைய மேஜிக் நிகழ்ச்சியில் ஆட காரணம் என்ன?

அவர்கள் இதன் மூலம் என்ன எதிர்பார்க்கிறார்கள்?


வளர்ந்து வரும் குழந்தை பருவத்திலேயே இதையெல்லாம் குடும்பத்தோடு ரசித்து பார்ப்பது தான் வாழ்க்கை என்ற அவர்களின் கலாச்சாரத்தை குழந்தைகளின் மனதில் ஊட்ட நினைக்கிறார்களா?

சாதாரண ஒரு நிகழ்ச்சிக்கே டிக்கட் போட்டு பணம் உண்டாக்கும் தற்போதைய வியாபார உலகில் தொடந்து 4 நாட்கள் இப்படி ஒரு ப்ரீ ஷோ நடத்த காரணம் என்ன?


மனதில் இன்னும் பலவிதமான சந்தேகங்களோடும், கேள்விகளோடும் -
ஆரம்பத்தில் அவர்கள் மேல் எழுந்த மரியாதையை தூக்கி தூர எறிந்தவர்களாக மேற்கை நினைத்து நொந்து கொண்டு.......

0 comments: