நான் 4-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயம். ஏதோ குருட்டாம் போக்கில் முதல் வகுப்பிலிருந்தே முதல் மாணவனாக இருந்தேன். முதல் இரு வகுப்புகள் தாய் மாமாவின் வீட்டில் நின்று படித்துக் கொண்டிருந்தேன். தொடர்ந்து என்னைப் பிரிந்து இருக்க என் தாய் சம்மதிக்காததால் மூன்றாம் வகுப்பிலிருந்து பெற்றோர்களுடன் இருந்து படிக்க சென்று கொண்டிருந்தேன். முதல் வகுப்பு படிக்கும் சமயத்திலிருந்தே படிப்பிற்கு என்னை உற்சாகமூட்டுவதில் மாமா பெரும் பங்காற்றினார்.
அப்பொழுது என்னுடைய தாயின் வீட்டிற்கும் தாய் மாமா வீட்டிற்கும் 16 கிலோ மீட்டர் தூரம் இருந்தது. நான் பெற்றோர்களுடன் இருந்தாலும் என்னை அடிக்கடி மாமா வந்து பார்த்து செல்வார். வரும் பொழுதெல்லாம் என் படிப்பைக் குறித்து விசாரிக்க தவறுவதில்லை. நானும் என் மதிப்பெண் பட்டியல் வரும் பொழுதெல்லாம் அதனை மாமாவிடம் காட்டாமல் வகுப்பில் திருப்பி கொடுப்பதில்லை.
அப்பொழுதும் அப்படித்தான். 4-ஆம் வப்பின் அரையாண்டுத் தேர்வின் மதிப்பெண் பட்டியல் வந்திருந்தது. வழக்கம் போல் முதல் தரம் தான். அந்நேரம் எதேச்சையாக எங்கள் மாமாவும் எங்களை காண வந்திருந்தார். மிகுந்த குதூகலத்துடன் மதிப்பெண் பட்டியலை மாமாவிடம் காண்பித்தேன்.
மாமா என்னை ரொம்பவும் பாராட்டி ஒரு ஹீரோ பென் பரிசாக தந்தார். இப்பொழுதும் அதன் அழகை மறக்க முடியவில்லை. என் வாழ்நாளில் எனக்கு எப்படிப் பட்ட வெகுமதிகள் கிடைத்திருந்தாலும் அதற்கு ஒப்பாகாது. முழுவதும் தங்க முலாம் பூசப்பட்டது போல் முழுக்க கோல்டன் கலரில் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. இந்நேரம் ஒன்றைக் குறிப்பிட்டாக வேண்டும். அக்காலத்தில் எழுதுவதற்கு பெரும்பாலும் நான் பயன்படுத்தியிருந்தது பென்சிலைத் தான். எப்பொழுதாவது என் பிஞ்சு பருவ மறக்க முடியாத நண்பன் செய்யது அலீம் ராஜாவிடமிருந்து ரீபில் வாங்கி பயன்படுத்துவேன்.இப்பென் கிடைத்ததும் எனக்கு தலை கால் புரியவில்லை.
அப்பொழுது எனது சகோதரன் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். அவனுக்கே ஹீரோ பென் இல்லை, பிறகு உனக்கு எதற்கு என்று கேட்ட தந்தையிடம் அடம்பிடித்து நானே அதை வைத்துக் கொண்டேன்.
ஏற்கெனவே வகுப்பில் நான் முதல் மாணவன்; தற்போது இப்பென்னும் என்னுடன் சேர்ந்து கர்வத்துடன் சுற்ற ஆரம்பித்தது. யாருக்கும் அதை தொட்டு பார்க்கக் கூட கொடுக்க மாட்டேன், என் இனிய நண்பனை தவிர.
ஒருநாள் அவனுக்கு எழுதக் கொடுத்த பென்னை திரும்ப வாங்க மறந்து விட்டேன். அவனும் மறந்து அதைக் கொண்டு சென்று விட்டான். என் நல்ல நேரம் அன்று பார்த்து இரவு நான் தூங்கிய பிறகு வேலை முடிந்து வந்த என் தந்தை ஏதோ எழுதுவதற்கு அப்பென்னை தேடியிருக்கிறார். வேறு ஏதோ கோபத்தில் இருந்திருப்பார் போல தோன்றுகிறது, எனக்கு உறக்கத்திலேயே உதை விழுந்தது.
நானும் நல்ல உறக்க கலக்கத்தில் இருந்ததால் பென்னை தொலைத்து விட்டதாக நினைத்து பென் எங்கே என்று கேட்ட போது மலங்க மலங்க விழித்துக் கொண்டு நின்றிருந்தேன். அடி என்றால் அப்படி அடி, உடம்பெல்லாம் ஆங்காங்கே சாப்பிடமுடியாத கொழுக்கட்டைகளாக விழுந்தது.
மறுநாள் வழக்கம் போல் காலை 6 மணிக்கு எழுந்து வீட்டு திண்ணையில் இருந்து படித்துக் கொண்டிருக்கிறேன். திடீரென என் நண்பன் அந்த பென்னைக் கொண்டு வந்து மறந்து கொண்டு சென்றுவிட்டதாக கூறி தந்து விட்டு சென்று விட்டான். எனக்கு என்ன நடக்கிறது என்றே நம்ப முடியவில்லை. கிடைத்த அடியெல்லாம் ஒரு நொடியில் மறந்து விட்டது. ஏதோ புதையல் கிடைத்தது போல் மிகுந்த சந்தோசத்தோடு அடி விழுந்திருந்த இடங்களை தடவிக் கொண்டே பென்னை என் தாயிடம் கொண்டு காண்பித்தேன்.
ஒன்றும் கூறாமல் தந்தை அதை வாங்கிக் கொண்டு சென்று விட்டார். பின்னர் அதனை நான் காணவே இல்லை. உண்மையில் அடியால் வேதனித்து அழுததை விட என் பென் திரும்பக் கிடைக்காததால் நிறைய அழுதேன்(பின்னே தலைகால் புரியாமல் அல்லவா வகுப்பில் கொட்டமடித்தேன்).
பொறுக்க முடியாமல் ஒருநாள் தாயிடம் கேட்டேன். கிடைத்த பதில் - தந்தை வேலைக்கு கொண்டு சென்ற இடத்தில் அதை தொலைத்து விட்டதாக!
செய்யாத தவறுக்கு உறக்கத்திலேயே நான் தண்டிக்கப் பட்டேன். செய்த தவறுக்கு என் தந்தையை யார் தண்டிப்பார்?
(பி.கு) தந்தை மீது குற்றம் சுமத்துவதல்ல இப்பதிவின் நோக்கம். இவ்வுலகில் நீதி மனிதர்களால் நடப்பாக்க முடிவதில்லை என்பதையும், தவறு செய்யாதவர்கள் அவசரப்பட்டு தண்டிக்கப் படுகிறார்கள் என்பதையும் உணர்த்துவது மட்டுமே இப்பதிவின் முக்கிய குறிகோள்.
Wednesday, November 09, 2005
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
சிந்தையைத் தூண்டும் பதிவு பல கேள்விகளை எழுப்பும். இதுவும் எழுப்புகிறது.
---செய்த தவறுக்கு என் தந்தையை யார் தண்டிப்பார்---
* விலை மதிப்பானதை மகன் மறந்துவிடக் கூடாது என்பதை ஆழ்மனதில் நினைப்பவர்.
* பரிசாக கிடைத்த பொருளை பேணி பாதுகாக்க வேண்டும் என்னும் நம்பிக்கையில் ஊறியவர்.
* உணர்ச்சிவசத்தில் உரிமைக்குரியவரை கடுமையாக கண்டிப்பவர்.
தந்தை என்ன தவறு செய்தார்?
உங்களுக்கு பேனா உயர்ந்ததாக தெரிந்த அளவிற்கு அவருக்கு உயர்ந்ததாக தெரியவில்லை. அவர் உங்களிடம் அந்த பேனாவை வாங்கியது ஒரு தேவையைப் பூர்த்தி செய்ய மட்டுமே. உங்கள் வயதில் அவர் எவ்வாறு நடந்து கொண்டார் என கேட்டுப்பாருங்கள்.
//விலை மதிப்பானதை மகன் மறந்துவிடக் கூடாது//
அவர் மறக்கலாமோ?
//பரிசாக கிடைத்த பொருளை பேணி பாதுகாக்க வேண்டும்//
யார் மகன் மட்டும் தானா?
பிள்ளையார் சுழிப் போட்டுட்டீங்கங்க,அது என்ன ஆரம்பிக்கிறவங்க எல்லாம் "நினைவிடைதோயலில்" ஆரம்பிக்கிறீங்? ஆனா இப்ப எல்லாம் பிள்ளைங்கள அடிக்கிறது என்பது மிக அருகிப் போய்விட்டது. எங்க வீட்டுலையும் அடிச்சதில்லை. என் கணவரின் பெற்றோர்களும் பிள்ளைகளை அடிச்சதில்லையாம்.
ஆனா என்பிள்ளைகளை லேசா ஒண்ணுரெண்டு வெச்சிருக்கேன். சில சமயம் குறும்புகள், அவர்களுக்குள் அடிதடிகள் எல்லை
மீறிப் போய்விடும்.
"ஆனா என்பிள்ளைகளை லேசா ஒண்ணுரெண்டு வெச்சிருக்கேன்."
பார்த்துங்க! நாளை ஒருநாள் இந்துபோல் "என் தாய் தந்த அடியின் கதை" என்று பதிவிடப் போகிறது.
தந்தை மீது குற்றம் சுமத்துவதல்ல இப்பதிவின் நோக்கம். இவ்வுலகில் நீதி மனிதர்களால் நடப்பாக்க முடிவதில்லை என்பதையும், தவறு செய்யாதவர்கள் அவசரப்பட்டு தண்டிக்கப் படுகிறார்கள் என்பதையும் உணர்த்துவது மட்டுமே இப்பதிவின் முக்கிய குறிகோள்.//
நீங்க குறிப்பிட்ட சம்பவத்துக்கு ( எந்த வீட்லதாங்க அப்பா, அம்மா அடிக்கல..எல்லா அடியும் நியாயமானதுதான்னா நினைக்கறீங்க?) நீங்கள் இட்ட பி.கு. ரொம்ப ஜாஸ்திங்க..
உங்க அப்பா செஞ்சது தப்புத்தான். ஆனா அத போய் நீஙக ஒப்பிடற 'இவ்வுலகில் நீதி மனிதர்களால் நடப்பாக்க முடிவதில்லை'ன்னு சொல்றது..
I think you have stretched it too faaaaaar!
Post a Comment